LR Jagadheesan : 2ஜி விவகாரம் தொடர்பான இவர் மீதான கோபம் இன்னமும் ஆறவில்லை. அது ஆறவும் ஆறாது.
ஆனால் அது என்னைப்போன்ற தனிமனிதர்களின் தனிப்பட்ட உணர்வு. தமிழ்நாட்டின் பொதுநலன் நோக்கில் அத்தகைய தனிப்பட்ட உணர்வுகளுக்கு எந்த பெறுமதியும் இல்லை. தேவையும் இல்லை.
காரணம் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.
தமிழ்நாடு கடந்த பத்து ஆண்டுகளில் பாழ்படுத்தப்பட்டவிதம்; சுரண்டப்பட்டவிதம்; பகாசுரத்தனமாக கொள்ளையடிக்கப்பட்டு களவுபோன கஜானாவாக காலியாக நிற்கும் நிலைமை;
கடந்த 50 ஆண்டுகாலம் படிப்படியாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் தற்சார்பு பொருளாதாரவல்லமை நிலைகுலைந்து நிற்கும் அவலம்;
தாளமுடியாத கடன் சுமையுடன் தடுமாறும் தமிழ்நாட்டின் நிலைமை; அதன் நிதியுரிமைகள் முற்றாக பறிக்கப்பட்ட கொடுமை என இன்றைய தமிழ்நாட்டு நிதி நிலைமை கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி அவசரசிகிச்சை பிரிவில் இருப்பதைப்போன்ற ஆபத்தான நிலையில் இருக்கிறது.
இதை மேம்படுத்த எல்லாதரப்பின் அதிகபட்ச உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.
அதுவும் மிகவும் அவசரமாக. பல பத்தாண்டுகள் மத்திய அமைச்சராக இருந்த ப சிதம்பரத்துக்கு டில்லியின் உள்ளும் புறமும் நன்கு தெரியும்.
அவரது அத்தனை திறமைகளையும் உதவிகளையும் ஆலோசனைகளையும் திமுக கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாடும் வேலைவாய்ப்பு பெருக்கமும் அதன் தொழில்துறையின் வளர்ச்சி அதனால் பெருகும் வரி வருவாய் பெருக்கம் மூலம் மட்டுமே சாத்தியம்.
அதற்கு சிதம்பரம் பெரிதும் பயன்படுவார்.
அவரது அனுபவ அறிவு பெரும் உதவியாக இருக்கும். சிதம்பரம் மட்டுமல்ல அவரைப்போன்ற மற்றகட்சியில் இருக்கும் இன்னும் பலரது அனுபவ அறிவு பயன்படும். கண்டிப்பாக ஸ்டாலின் அவற்றையெல்லாம் தேடிச்சென்று பயன்படுத்திக்கொள்வார் என்பது நம்பிக்கை; கொள்ள வேண்டும் என்பது கோரிக்கை.
சென்னை மேயராக இருந்தபோது அவர் கடைபிடித்த அதே அரவணைப்பு அணுகுமுறையை மேலதிக அரசியல்/நிர்வாக அனுபவம் பெற்று தமிழக முதல்வராக உயர்ந்துள்ள இன்றைய நிலையில் இன்னும் சிறப்பாக செயல்படுத்துவார்.
பிகு: கலைஞருக்கு ஒரு அழகிரியைப்போல சிதம்பரத்துக்கு ஒரு கார்த்தி. அதையெல்லாம் நாம் பொருட்படுத்தத்தேவையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக