புதன், 11 மார்ச், 2020

மத்திய பிரதேசத்தில் எம் எல் ஏக்கள் விற்பனை அமோகம்


மாலைமலர் : போபால்: மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  92 பேரையும் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறது.
ம.பி., காங்., கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா, கட்சி மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸில் இருந்து சிந்தியா விலகி, கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த சிந்தியா , பாஜ.,வில் இணைய உள்ளார். ஜோதிராதித்யா சிந்தியாவின் 22 ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்களும் பாஜ.,விற்கு தாவ உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரில் தங்கியுள்ளனர். இதற்கிடையே ம.பி., அரசுக்கு ஆதரவான மீதமிருக்கும் 92 காங்., எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட உள்ளனர்.

கமல்நாத் அரசு தனது எம்.எல்.ஏ.க்களை மட்டுமின்றி ஆட்சிக்கு ஆதரவான சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. காங்., இந்த நெருக்கடியை சந்திப்பதற்கு முன்பு அதன் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்தது. பாஜ,விற்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ம,பி., சட்டசபையின் மொத்த எம்.எல்ஏ.,க்களின் எண்ணிக்கை 230 (இதில் 2 தொகுதிகள் காலியாக உள்ளது).
 ம.பி., அரசிற்கு நான்கு சுயேச்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள், ஒரு சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது. இவர்களிலும் சிலர் பாஜ.,வுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: