புதன், 11 மார்ச், 2020

சிஏஏ: டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டம்-.. புதுக்கோட்டை கரம்பங்குடியில் .. வீடியோ


சிஏஏ:  டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டம்-அதிர்ச்சியில் வங்கிகள்!மின்னம்ப்லம் : தமிழகம் முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எல்லாம் திரும்பப் பெற்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்த வகையில் இன்று மட்டும் கறம்பக்குடியில் இருக்கும் வங்கிகளில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இந்தப் போராட்டம் வங்கிகளிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி கறம்பக்குடி குடியுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் உறுப்பினரான அபுபக்கர் சித்திக் கிடம் பேசினோம்.
“புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியின் ஷாயின் பாக் போராட்டம் (குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம்) இன்று மார்ச் 11 ஆம் தேதி 22 ஆவது நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நூதனப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கறுப்பு பலூன் பறக்க விடுதல், வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொள்ளுதல் என்று நடந்துவரும் போராட்டங்களில் இன்று (மார்ச் 11) முக்கியமான ஒரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தோம்.

அதன்படி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு வங்கிகளில் எங்கள் சேமிப்புக் கணக்குகளில், டெபாசிட் கணக்குகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் இருந்து நாங்களே திரும்ப எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்தோம்.
அதன்படி கறம்பகுடி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான ஐஓபி, இந்தியன் வங்கி ஆகிய இரு வங்கிகளிலும் இருக்கும் எங்களது சாதாரண சேமிப்பு, டெபாசிட் கணக்குகளில் இருந்து பணத்தை திரும்பத் தரும்படி அனைவரும் எழுதிக் கொடுத்தோம்.
அப்போது வங்கி மேலாளர்கள், ‘உங்களைப் போன்ற மக்களின் டெபாசிட் பணத்தை நம்பிதான் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இப்படி நீங்கள் எடுத்தால் வங்கிகளின் செயல்பாடு பாதிக்கப்படும். அதனால் இப்படி பணத்தை எடுக்க வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்தார்கள் ஆனால் போராட்டக் கார்களான நாங்கள், எங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கவே இப்படி செய்கிறோம் என்று சொல்லி பணத்தை எல்லாம் எடுத்துவிட்டோம். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி ஆகிய இரு வங்கிகளில் இருந்து தலா ஐம்பது லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை இன்று எடுத்திருக்கிறோம். இந்தப் போராட்டம் தொடரும்” என்றார்.
கறம்பக்குடி என்பது புதுக்கோட்டை மாவட்டத்திலே சில்லறை வர்த்தகத்தில் இரண்டாமிடத்தில் இருக்கும் பேரூராட்சியாகும். முதலிடத்தில் அறந்தாங்கி இருக்க, அதற்கு அடுத்த வர்த்தகப் புழக்கம் கொண்டது கறம்பக்குடி.
கறம்பக்குடி இந்தியன் வங்கி வட்டாரத்தில் பேசினோம்.
“இன்று (மார்ச் 11) காலை 11 மணியளவில் இஸ்லாமியர்கள் ஆண்கள், பெண்கள் எல்லாம் ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் வங்கிக்குள் வந்து அமைதியாக, ‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் வங்கி டெபாசிட்டுகளை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். பணத்தைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்தனர். ங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வந்தால், தரமுடியாது என்று வங்கிகளால் சொல்ல முடியாது. ஆனாலும், பணம் எடுக்க வந்தவர்களிடம் வங்கி மேலாளர் சிறிது நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
‘இது மார்ச் மாதம். இந்த மாதத்தோடு நிதியாண்டு முடிகிறது. இந்த மாதம்தான் அதிக டெபாசிட் தொகையை வங்கிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுமாதிரி தொகையை பெருமளவு எடுத்தீர்கள் என்றால், மக்களுக்கு பல்வேறு கடன்கள், நிதியுதவிகள் செய்ய முடியாமல் போகும். இது அரசுக்கு எதிரானதாக இல்லாமல் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். உங்கள் போராட்ட வடிவத்தை மறுபரிசீலனை செய்யுங்களேன்’ என்றெல்லாம் பேசிப் பார்த்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. அனைவரும் செலான் எழுதிக் கொடுத்தனர்.
எனவே வழக்கமாய் இரு கேஷ் கவுன்ட்டர்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ஒரு புதிய கவுன்ட்டரும் திறந்து சுமார் நூறு பேருக்கு மேல் பணத்தைத் திரும்பக் கொடுத்தோம். அதிகபட்சமாக ஒருவர் ஒன்பது லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைத் திரும்பப் பெற்றார்.
இன்று மட்டும் சில மணி நேரத்திலேயே சுமார் 40 லட்சம் ரூபாய் பணத்தை இந்தியன் வங்கியில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, ‘இதேபோல நாளையும் பிற வாடிக்கையாளர்களோடு வந்து இதே போராட்டத்தைத் தொடருவோம்’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இது தொடர்ந்தால் வங்கிகளின் நிலையும், மக்களின் நிலையும் கவலைக்குரிய விஷயம்தான்” என்றார்கள்.
ஏற்கனவே வங்கிகளின் நிலைமை பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்திருக்கும் முஸ்லிம் செல்வந்தர்களில் தொடங்கி, நடுத்தர வர்க்க இஸ்லாமியர்கள் வரை வங்கி டெபாசிட்டுகளை வாபஸ் பெறும் போராட்டம் வங்கிகளால் கவலையோடே பார்க்கப்படுகிறது.
-ஆரா

கருத்துகள் இல்லை: