செவ்வாய், 10 மார்ச், 2020

திண்டிவனம் திமுக வெற்றி செல்லும்: அதிமுக மனு தள்ளுபடி!

திண்டிவனம் திமுக வெற்றி செல்லும்: அதிமுக மனு தள்ளுபடி!minnambalm : திண்டிவனம் தொகுதியில் திமுக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில், திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம், அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உட்பட 11பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகள் பெற்ற நிலையில். சீத்தாபதி சொக்கலிங்கம் 61,879 வாக்குகள் பெற்று 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து எஸ்.பி.ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தபால் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. சீதாபதி மகனால் தேர்தல் அதிகாரிகளிடம் தபால் வாக்குகள் வழங்கப்பட்டது. எனவே திமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 10) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தபால் வாக்கு சரியாக எண்ணப்படவில்லை , தபால் வாக்குகளை திமுக வேட்பாளரின் மகன்தான் கொடுத்தார் என்ற அதிமுக வேட்பாளரின் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது என்று கூறிய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அதிமுக வேட்பாளரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். திமுக எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கத்தின் வெற்றி செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.
கவிபிரியா

கருத்துகள் இல்லை: