வியாழன், 12 மார்ச், 2020

5,8 பொதுத் தேர்வை நடத்தினால் என்ன தவறு?: முதல்வர்! எடப்பாடியின் ஆர் எஸ் எஸ் விசுவாசம்?

5,8 பொதுத் தேர்வை நடத்தினால் என்ன தவறு?: முதல்வர்!மின்னம்பலம : 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தவறு என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 2020ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு
வெளியிட்டது. பின்னர் எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 12) மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது 5,8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, 5,8 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வு முதலில் ஏன் அறிவிக்க வேண்டும்? அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஏன் ரத்து செய்யவேண்டும்? பொதுத்தேர்வு சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 5,8 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் என்ன தவறு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் தான் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியில்லாமல் ரத்து செய்யப்பட்டது.
5,8 வகுப்பில் பொதுத் தேர்வு நடத்தினால்தான் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் பதற்றம் இன்றி தேர்வு எழுத முடியும். முன்பெல்லாம் பிஎஸ்சி படிக்கும் போது ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் அனைத்து பாடத்தையும் எழுதினால்தான் அந்த ஆண்டில் தேர்ச்சி பெற முடியும். அப்போது தரமான கல்வி இருந்தது. அதுபோன்று தரமான கல்வி வேண்டும் என்பதால் தான் தேர்வை அறிவித்தோம். ஆனால் அதற்கு எதிராக நீங்கள் அவதூறாகப் பிரச்சாரம் செய்ததால் திரும்பப் பெறப்பட்டது. கல்வித் தரத்தை உயர்த்தினால் தான் உலகளவிலான கல்வியைக் கொண்டு வர முடியும். மாணவர்களின் தகுதி ஆசிரியருக்கோ பெற்றோருக்கோ தெரியாது. தேர்வின் அடிப்படையில் தான் தெரியவரும் என்று பதிலளித்தார்.
அப்போது திமுக உறுப்பினர் பொன்முடி, என்.ஏ.எஸ் சர்வே அடிப்படையில் 2011ல் 2ஆவது இடத்திலிருந்த தமிழகத்தின் கல்வித் தரம் தற்போது 8ஆவது இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “எதிர்க்கட்சியினர் ஆசிரியர்களைப் போராட்டத்தில் இறக்கிவிடுகிறீர்கள் என்றும், அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கவிபிரியா

கருத்துகள் இல்லை: