ஞாயிறு, 8 மார்ச், 2020

BBC: யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் கைது - விசாரணை... அமலாக்கத்துறை


நிதி நெருக்கடியில் சிக்கி இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட யெஸ் பேங்கின் நிறுவனர் ரானா கபூர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் (சனிக்கிழமை) மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதற்குமுன், மும்பையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு ஒன்றையும் பதிந்தனர்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை யெஸ் பேங்க், ஏற்கனவே பல நிதி சிக்கலில் மாட்டியிருந்த திவான் ஹவுசிங் நிதி நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதன் பின்னணியில் ரானா கபூர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

திவான் ஹவுசிங் நிறுவனம் மட்டுமல்லாமல் மேலும் பல நிறுவனங்களுக்கு யெஸ் பேங்க் கடன் வழங்கியதில் ரானாவின் தலையீடு குறித்தும், கடன்களுக்கு பிரதிபலனாக ரானாவின் மனைவி பிந்து கபூரின் கணக்குகளுக்கு வந்த பணம் குறித்தும் அமலாக்கத்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் யெஸ் பேங்கை மீட்கும் முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளது. யெஸ் பேங்கின் 49% பங்குகளை வாங்கும் நிலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. ஆனால், இந்த முதலீடு குறித்த முடிவை எடுப்பதற்கு நாளை வரை நேரம் இருப்பதாகவும், அதன் பிறகே முதலீடு குறித்த முடிவு தெரியும் என்று பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளின் வரலாற்றிலே கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலையை தற்போது வங்கிகள் எதிர்கொண்டு வருகின்றன. அதிலும், தனியார் வங்கியான யெஸ் பேங்கின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.
2004ல் ரானா கபூர் மற்றும் அசோக் கபூரால் நிறுவப்பட்ட யெஸ் பேங் மும்பையை தலையிடமாகக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வந்தது.
2019 நிலவரப்படி, நாடு முழுவதும் 1,122 கிளைகளுடன், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கி வந்த யெஸ் பேங்கை வியாழக்கிழமை, இந்திய ரிசர்வ் வங்கி அதன் கட்டுப்பாட்டில் எடுத்தது.
அதுமட்டுமின்றி, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் ஒருநாளுக்கு அதிகப்பட்சமாக 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் இந்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
யெஸ் பேங்கின் இந்த நிலைக்கு என்ன காரணம்? பங்குச்சந்தையில் யெஸ் பேங்கின் நிலை என்ன? இதுகுறித்த 5 முக்கிய தகவல்களை தொகுத்து தருகிறோம்.
  • பல்வேறு நிர்வாக சிக்கல்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பில் யெஸ் பேங்க் இருந்து வந்தது. முக்கியமாக, அண்மை காலத்தில் நஷ்டத்தில் இயங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் பட்டியலில் யெஸ் பேங்க்கும் ஒன்று. சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக் கடனை இந்திய ரிசர்வ் வங்கி 2019ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது அந்த வங்கிக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.
  • தற்போது, வங்கி தங்குதடையின்றி செயல்படுவதற்கான மூலதனத்தை திரட்டுவதில் வங்கியின் தலைமையின் பொறுப்பில் இருந்தவர்கள் தவறிவிட்டனர். நிலைமை விபரீமாவதை உணர்ந்த இந்திய ரிசர்வ் வங்கி, மூலதனத்தை திரட்ட வங்கியால் இயலாததால் அதன் நிதிநிலை மோசமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி தற்காலிக தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. மேலும், யெஸ் பேங்கின் இயக்குநர்கள் குழுவையும் 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மொத்த வங்கியின் கட்டுப்பாட்டையும் எடுத்து கொண்டது.
  • பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் பிரஷாந்த் குமார் என்பவரை யெஸ் பேங்கின் நிர்வாக அதிகாரியாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதி நெருக்கடி சிக்கலில் சிக்கியுள்ள யெஸ் பேங்கை மீட்பதற்கான திட்டங்கள் கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், யெஸ் பேங்கை கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் இந்த முடிவு தனி ஒருவரால் எடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின்னே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
  • இந்திய பங்குச்சந்தையில் யெஸ் பேங்கின் பங்குகள் மரண அடியை சந்தித்துள்ளன. சர்வதேச தரகு நிறுவனமான ஜேபி மோர்கன் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) யெஸ் பேங்க் பங்கின் விலையை பன்மடங்கு குறைத்து 1 ரூபாய் என நிர்ணயித்தது. இன்று மட்டும் (வெள்ளிக்கிழமை) சுமார் 85% அளவுக்கு பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. இன்றைய நாளின் முடிவில் தேசிய பங்குச் சந்தையில் யெஸ் பேங்கின் பங்கு 16.60 ரூபாய்க்கும், மும்பை பங்குச் சந்தையில் 16.20 ரூபாய்க்கும் வர்த்தகமானது. கடந்த ஆண்டு இதே நாளில் யெஸ் பேங்கின் பங்கின் விலை 231.80 ரூபாய் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. யெஸ் பேங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் முயற்சியில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ள நிலையில், அதுவரை பங்குச்சந்தைகளில் இந்த வங்கியின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் யெஸ் பேங்கை மீட்கும் முயற்சியில் பாரத ஸ்டேட் வங்கியும், எல்.ஐ.சியும் வங்கிக்கான மூலதனத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யெஸ் பேங்கின் ஊழியர்களும் தங்கள் எதிர்காலம் கொண்டு மிகவும் கவலை கொண்டுள்ளனர். மும்பையில் இன்று காலை முதல், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வங்கிகள் முன் குவிந்தனர். பல வாடிக்கையாளர்களால் யெஸ் பேங்கின் இணைய தளத்தையும், செயலியையும் பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். ஃபோன்பே செயலியின் வங்கி கூட்டாளியாக யெஸ் பேங்க் இருந்து வந்தது. தற்போது அந்த செயலியும் முடங்கி போயிருப்பதாக சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை: