சனி, 11 ஜனவரி, 2020

வன்னியர் சங்க அறக்கட்டளை பெயர் மாறியது . இனி ராமதாஸ் அறக்கட்டளையாம்

பெயர்  மாறிய வன்னியர் சங்க அறக்கட்டளை!மின்னம்பலம் : பாமகவுக்கு அடித்தளமாக செயல்படும் வன்னியர் சங்கத்தின் இதயமாக இயங்கி வரும், வன்னியர் சங்க (கல்வி) அறக்கட்டளை, இப்போது டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் கோனேரிக்குப்பத்தில் இருந்து இன்று (ஜனவரி 10) நமக்குக் கிடைத்திருக்கிறது.
இதுபற்றி பாமகவின் உள் வட்டாரங்களில் விசாரித்தோம்.
“வன்னியர் சங்க அறக்கட்டளையை கலைஞர் முதல்வராக இருக்கும்போது துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. டாக்டர் ராமதாஸ் மனைவி பெயரில் சரஸ்வதி பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியும் இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமானதுதான்.

ஆரம்ப காலத்தில் வன்னியர் சங்க அறக்கட்டளையில் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, ராமதாசின் சம்பந்தி கோவிந்தராஜ், அதன் பின் காடுவெட்டி குரு, போன்றவர்கள் இருந்தனர். காடுவெட்டி குரு மறைவுக்குப் பின்னர் வன்னியர் சங்கத்தின் தலைவராக, அதுவரை வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த பு.தா. அருள்மொழியை நவம்பர் 2 ஆம் தேதி ராமதாஸ் நியமித்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வன்னியர் சங்க அறக்கட்டளை டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று ஆவண ரீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு இன்று (ஜனவரி 10) கோனேரிக்குப்பத்தில் அறக்கட்டளையின் பெயர் பலகையும் டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது டிரஸ்டு மெம்பர்களாக டாக்டர் அன்புமணி, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஆர்ஜி என்கிற கோவிந்தசாமி, ஜி.கே.மணி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம், சேலம் சுந்தர்ராஜன் ஆகியோர். இருக்கிறார்கள்” என்கிறார்கள் பாமகவின் உள் விவகாரம் அறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: