திங்கள், 6 ஜனவரி, 2020

தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க அழுத்தம் கொடுப்போம் - தமிழக ஆளுநர்

கறுப்பு உடையில் வந்த தமீம் அன்சாரி
 இரட்டை குடியுரிமை: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்!மின்னம்பலம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் சட்டமன்றம் இன்று கூடியது.
2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று (ஜனவரி 6) காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, நோ சிஏஏ, நோ என்ஆர்சி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்துவந்திருந்தார். ஆளுநர் தனது உரையைத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், டிடிவி தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோரும் ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.
உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும் அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யும். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.


தொடர்ந்து, “2019-20 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 12,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு பாலின விகிதம் 1000 க்கு 917 என்பதில் இருந்து 943ஆக உயர்ந்துள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் செயலி நடைமுறை மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்பது 49.3 சதவிகிதமாக உள்ளது. இது மற்ற மாநிலங்களை விட அதிகம். அண்ணா பல்கலைக் கழகம் ஒப்புரவு உயர் கல்வி நிறுவனமாக மாறினாலும் இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க 2000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதன்மூலம் 295 சுற்றுலாத் தளங்கள் மேம்படுத்தப்படும்” என்று தெரிவித்த ஆளுநர்,
“தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் கடந்த 8 ஆண்டுகளில் 31,526 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் இந்த ஆண்டின் மத்தியில் முடிவடையும். 2011-12 முதல் தற்போது வரை 3,80,000 பசுமை வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, சிக்கன் குனியாவைத் தடுக்க அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் விலையில்லா கொசுவலைகள் வழங்கப்படும். நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் 100 கோடி செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும். முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த தேவையான அனுமதியை மத்திய, கேரள அரசுகள் தர வேண்டும். மேகதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் பணியை தமிழக அரசு செயல்படுத்தும். கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி தண்ணீர் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று பேசினார்.
மேலும், “50.50 கோடி செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.உணவு தானிய உற்பத்தி 115 மெட்ரிக் டன் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதார் இணைக்கப்பட்டிருப்பதால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த முடிகிறது” எனவும் தனது உரையில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: