ஞாயிறு, 5 ஜனவரி, 2020

அனுராதா பட்வாலின் மகள் நான் ... பிரபல பாடகியின் மறுபக்கம் .. பேட்டி வீடியோ


அனுராதா பட்வாலின் மகள் நான்: இசையுலகில் புதிய சர்ச்சை!மின்னம்பலம் : பிரபல பாடகி அனுராதா பட்வால் தனது தாயார் என்று கூறி கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த கர்மலா மார்டெக்ஸ் என்னும் 45 வயது பெண் திருவனந்தபுரம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி அனுராதா பட்வால்தான் தனது தாயார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மலையாள ஊடகங்களுக்கும் அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில் ‘நான் பிரபல பாடகி அனுராதா பட்வால் - அருண் பட்வால் தம்பதியரின் மகள். நான் பிறந்த நேரத்தில் அவர்கள் வேலையில் பிசியாக இருப்பதாகக் கூறி என்னை பொன்னச்சன் மற்றும் ஆக்னஸிடம் கொடுத்துவிட்டார்கள். நான் பிறந்த நான்காவது நாளே என்னை வளர்க்க விருப்பமில்லை என்று கூறி பொன்னச்சனிடம் என்னை என் தாய் ஒப்படைத்து விட்டார். என்னை வளர்த்த பொன்னச்சன், அவர் இறக்கும் தறுவாயில்தான் இது குறித்து என்னிடம் கூறினார். இந்த விஷயம் எனக்குத் தெரியவரும்போதே எனக்கு 40 வயது கடந்துவிட்டது.

என்னை வளர்த்த ஆக்னஸுக்கு அல்ஸீமர் நோய் இருப்பதால் இது குறித்து எதுவும் தெரியாமல் உள்ளார். இந்த விஷயம் தெரிந்து அம்மா அனுராதாவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் என் நம்பரை பிளாக் செய்துவிட்டார். அனுராதா - அருண் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த எந்தவிதமான வசதியுடனும் நான் வளரவில்லை. என் தாயாருடன் நான் இருந்திருந்தால் அவர் என்னை எப்படி எல்லாம் வளர்த்திருப்பார் என்று எண்ணி ஏங்கியுள்ளேன். அதனால்தான் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன். எந்தவிதமான டிஎன்ஏ டெஸ்ட்டுக்கும் தான் தயார்’ என்று கூறியுள்ளார்.
மேலும் அனுராதா பட்வால் தனக்கு 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து அனுராதாவிடம் கேட்கும் போது, ‘முட்டாள் தனமான விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
அனுராதாவுக்கு ஆதித்யா என்கிற மகனும், கவிதா என்கிற மகளும் உள்ளனர். அவர் கணவர் அருண் பட்வால் தற்போது உயிருடன் இல்லை.

கருத்துகள் இல்லை: