வியாழன், 9 ஜனவரி, 2020

எஸ்.எஸ்.ஐ.யை சுட்டுக்கொன்றவர்கள்... கனியாகுமரியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு?

எஸ்.எஸ்.ஐ.யை சுட்டுக்கொன்றவர்கள்!  மின்னம்பலம் :  கன்னியாகுமரி களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று இரவு பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஸ்கார்ப்பியோ காரில் இரவில் 9.40 மணியளவில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் . அங்கிருந்த சக காவலர்கள் வில்சனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள போலீசாரின் உதவியையும் தமிழக போலீசார் நாடியுள்ளனர். இரு மாநில போலீசாரும் தனித்தனியே விசாரித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கேரள போலீசார் வில்சன் கொலை தொடர்புடையதாக 2 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

பள்ளிவாசல் வழியாகத் தப்பிச்செல்லும் போது பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இரண்டு பேர் வில்சனை சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து காரணமாக 2 மாதங்களாக ஓய்விலிருந்த வில்சன் அண்மையில் தான் மீண்டும் பணிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் நடந்த இந்த சம்பவம் குறித்து, “தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டதாகப் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறேன். அதற்கான ஆதாரம் தான் களியக்காவிளை துப்பாக்கிச்சூடு ஆகும். இனியும் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் கள்ளத்துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: