வியாழன், 23 ஜனவரி, 2020

குடியுரிமை சட்ட விவாதம்: அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஏற்றனர்

குடியுரிமை சட்டம் பற்றி விவாதம்: அமித்ஷா விடுத்த சவாலை அகிலேஷ் யாதவ், மாயாவதி ஏற்றனர் தினத்தந்தி : லக்னோ, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதன் அடிப்படையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார். “சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று சட்டத்தில் எங்காவது கூறப்பட்டுள்ளதா என்பதை காட்ட முடியுமா? இதுதொடர்பாக பா.ஜனதா தலைவர்களுடன் விவாதத்துக்கு வர தயாரா?” என்று அமித்ஷா சவால் விடுத்தார்.
இந்நிலையில், அமித்ஷா விடுத்த சவாலை சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
லக்னோவில், மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் ஜானேஸ்வர் மிஸ்ரா நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-


குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை அமித்ஷா தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். சவால் விடுக்கிறார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரங்கள் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் விவாதம் நடத்த நான் தயார்.

அதுபோல், பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பா.ஜனதா தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும்.

குடியுரிமை சட்டத்தால், ஏறத்தாழ நாடு முழுவதும் பற்றி எரிகிறது. மத அடிப்படையில் கொண்டுவரப்பட்ட முதலாவது சட்டம், இதுவே ஆகும். அதனால், ஒவ்வொரு குடிமகனும் கொந்தளிப்பில் இருக்கிறான். சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நாட்டை பா.ஜனதா இழிவுபடுத்தி உள்ளது. அரசியல் சட்டத்துடன் விளையாடுகிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பரவி உள்ளது. உலகின் மற்ற பகுதிகளிலும் பரவி விட்டது. போராட்டத்துக்கு பெண்கள் தலைமை தாங்குவது, சட்டம் குறித்த பொதுமக்களின் கவலையை உணர்த்துகிறது என்று அவர் பேசினார்.

இதுபோல், மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தால் மத்திய அரசு கலங்கிப் போயுள்ளது. மத்திய அரசு விடுத்த சவாலை ஏற்க பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது. எந்த இடத்திலும், எந்த தளத்திலும் விவாதம் நடத்த தயார் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: