செவ்வாய், 21 ஜனவரி, 2020

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்



தினத்தந்தி: 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது; துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். 1971 ஆம் ஆண்டில் நடந்தது மறக்கப்படவேண்டிய சம்பவம் என கூறினார் மின்னம்பலம் : மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பெரியார் குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக பேசினார். மேலும், ‘இதனை பற்றி எந்த பத்திரிகையும் எழுதவில்லை. சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்’ என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது உண்மைக்கு மாறான தகவல் என்று எதிர்ப்பு தெரிவித்த பெரியாரிய அமைப்புகள் ரஜினிக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று (ஜனவரி 21) போயஸ் கார்டனிலுள்ள தனது இல்லத்தின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "துக்ளக் விழாவில் நான் பேசியது சர்ச்சையாகியுள்ளது. 1971 இல் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். 1971ஆம் ஆண்டு சேலத்தில் ராமர், சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர் என்று 2017 இல் அவுட்லுக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இல்லாத ஒரு விஷயத்தை கற்பனையாக ஒன்றும் நான் கூறவில்லை. மற்றவர்கள் சொன்னதை பத்திரிகைகளில் வந்ததைத்தான் நான் கூறியுள்ளேன். சேலம் ஊர்வலத்தின்போது தர்ணாவில் ஈடுபட்ட லஷ்மணனும் அதை ஊர்ஜீதப்படுத்தியுள்ளார். இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். சாரி, நான் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தமும் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் பேசியது தவறானது என்று திருமாவளவன் உள்ளிட்டோர் கூறியுள்ளனரே என்ற கேள்விக்கு, “பத்திரிகைகளில் வந்த ஆதாரங்கள் அடிப்படையில் அதனை நான் தெளிவுபடுத்திவிட்டேன்” என்று பதிலளித்தார். நீங்கள் அவுட் லுக் பத்திரிகையின் ஆதாரத்தை காட்டுகிறீர்கள். ஆனால், எதிர்தரப்பினர் களத்தில் இருந்தவர்கள் கூறுகிறார்களே என்று கேட்க, “நான் பார்த்ததை நான் கூறுகிறேன். அவர்கள் பார்த்ததை அவர்கள் கூறுகிறார்கள். இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் பேச்சைக் கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் சென்னை செம்மொழி பூங்கா அருகே கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரஜினிக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது. வரும் 23ஆம் தேதி ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம் என தபெதிக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: