ஞாயிறு, 19 ஜனவரி, 2020

மார்ச்சில் வெளியே வரும் சசிகலா?

மார்ச்சில் வெளியே வரும் சசிகலா?மின்னம்பலம் : சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். வரும் பிப்ரவரி வந்தால் அவர்கள் சிறை சென்று மூன்று வருடங்கள் முடிகிறது.
சசிகலா சிறை சென்றபிறகு தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் சசிகலாவின் சகோதரர் திவாகரன், புதிய கட்சியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, சசிகலாவின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதையடுத்து சசிகலா என்னுடைய முன்னாள் சகோதரி என்று திவாகரன் தெரிவித்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனக் கசப்பால் சகோதரி சசிகலாவை சந்திக்காமல் இருந்துவந்த திவாகரனை, தற்போது அடிக்கடி பெங்களூரு சிறை வளாகத்தில் காண முடிகிறது.

தினகரன் தம்பி பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீக்கும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி நீலாங்கரை பண்ணை வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தில் தினகரன் குடும்பத்தினரைத் தவிர மற்ற சொந்தங்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 2020 புதுவருடம் தொடங்கிய முதல் வாரத்தில் திவாகரன் குடும்பமும், பாஸ்கரன் குடும்பமும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து, ‘திருமணம் உங்கள் தலைமையில்தான் நடைபெற வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும்’ என்று கூறினர்.
இந்த நிலையில்தான் திருமணத்திற்கு சசிகலா வர சம்மதித்துள்ளதாக மன்னார்குடி வட்டாரங்கள் சொல்கின்றன.
நிச்சயதார்த்தத்திற்குத்தான் தினகரனையும், அனுராதாவையும் அழைக்கவில்லை. திருமணத்திற்கு தினகரன் குடும்பத்தை கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்பது உள்பட பல கண்டீஷன்களை போட்ட பிறகுதான் திருமணத்திற்கு வர சசிகலா சம்மதித்துள்ளார். இதனையடுத்து, மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருமணத்திற்கான வேலைகளை மன்னார்குடியில் தற்போதே துவங்கிவிட்டனர். திருமணத்தில் சசிகலா நிச்சயம் கலந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் திவாகரன் கூறிவருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க தன்னை மதிக்காத திவாகரனை சசிகலா மீண்டும் சேர்த்துக்கொண்டிருப்பதாலும், திருமணத்திற்கான ஏற்பாடுகளை சிறையிலிருந்து சசிகலா கேட்டறிந்து வருவதாலும், அவர் மீது தினகரன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறுகிறார்கள் அமமுகவினர்.

கருத்துகள் இல்லை: