திங்கள், 20 ஜனவரி, 2020

பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் சிக்கினர்.. சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை...

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் சிக்கினர்
தினத்தந்தி : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் காஞ்சீபுரத்தில் சிக்கியுள்ளனர்.
சென்னை: குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ந்தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் காஞ்சீபுரத்தில் இருந்து பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகளை சப்ளை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காஞ்சீபுரத்தில் நேற்று போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து செல்போன் கடைகளிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே ஒரு கடையில் இருந்து ‘சிம்கார்டு’களை வாங்கி இருப்பது தெரியவந்தது.
இதே போல மேலும் 2 கடைகளிலும் சிம்கார்டுகளை பயங்கரவாதிகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகளை சப்ளை செய்தது தொடர்பாக கடை உரிமையாளர்கள் 3 பேரும், ஊழியர்கள் 3 பேரும் பிடிபட்டுள்ளனர்.
இவர்கள் 6 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காஞ்சீபுரம் செல்போன் கடைகளில் இருந்து பயங்கரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை போலி முகவரியை கொடுத்து வாங்கி இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் ஒருவரான அப்துல் சமீம் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருந்து சப்-இன்ஸ் பெக்டரை கொலை செய்த நிலையில் அவரது கூட்டாளிகளான காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் ஆகிய இருவரும் டெல்லியில் பிடிபட்டனர்.
இவர்களுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்ததாக பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் பிடிபட்டனர்.
இதன் பின்னர் பெங்களூரில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசார் முகாமிட்டு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரையில் 10 பேர் வரை கைது செய்யப் பட்டுள்ளனர்.
இந்த நிலையில்  பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக உசேன்செரீப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8-ந்தேதி சப்-இன்ஸ் பெக்டர் வில்சனை கொலை செய்து விட்டு பயங்கரவாதிகள் இருவரும் கேரளா வழியாக பெங்களூருக்கு தப்பி சென்றுள்ளனர். பெங்களூர் சென்றதும் அங்கு சிவாஜி நகரில் வசித்து வரும் உசேன்செரீப் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
அதே போல பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மற்றவர்களும் இவரது வீட்டிலேயே பதுங்கி இருந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்ட மெகபூப் பாட்சா, முகமது மன்சூர்கான் இருவருடன் உசேன்செரீப்பும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மூன்று பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான 2 பயங்கரவாதிகளும் நாளை போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ள நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் கியூபிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு விரைவில் மாற்றப்பட உள்ளது.
இதன் பிறகு என்.ஐ.ஏ. அதிகாரிகள் பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அப்போது பயங்கரவாதிகளின் சர்வதேச தொடர்பு பற்றியும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது

கருத்துகள் இல்லை: