சனி, 25 ஜனவரி, 2020

அரசமைப்பை பாதுகாப்போம்: களத்தில் குதித்த கத்தோலிக்க திருச்சபை

அரசமைப்பை பாதுகாப்போம்: களத்தில் குதித்த கத்தோலிக்க திருச்சபை மின்னம்பலம் :  நாட்டின் 71 ஆவது குடியரசுத் திருநாளை அரசியல் அமைப்பு சாசன பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கும்படி இந்தியாவின் முக்கியமான கிறிஸ்துவ அமைப்புகளில் ஒன்றான, இந்திய கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தம், நாடாளூமன்ற- சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர் (கிறிஸ்துவர்) ஒதுக்கீடு ரத்து ஆகியவற்றை முன் வைத்து இந்த வேண்டுகோளை தனது அனைத்து பிஷப்புகளுக்கும் முன் வைத்துள்ளது இந்திய கத்தோலிக்க திருச்சபை.
கேரளாவின் கொல்லத்தில் இருக்கும் கத்தோலிக்க பிஷப் பால் ஆண்டனி, தனது மறைமாவட்டத்தின் கீழ் உள்ள அனைத்து திருச்சபை பாதிரியார்களுக்கும் எழுதிய கடிதத்தில், “குடியரசுத் திருநாளான 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்களில் நடக்கும் ப்ரேயரில் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசோசா திருச்சபைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “யுனைடெட் இன்டர்ஃபெத் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள சமத்துத்துவத்துக்கான மனித சங்கிலியில் பங்கெடுக்குமாறு கிறிஸ்துவ சமூகத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து கத்தோலிக்க பிஷப் டிசோசா இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசுகையில், "நாடு முன்னெப்போதும் இல்லாத சமூக சூழ்நிலையை கடந்து வருகிறது. அரசியலமைப்பைக் காப்பாற்றுவேன் என்று பொறுப்பேற்ற பிரதமர் இந்த நாட்டிற்கு அரசியலமைப்பு வழங்கிய மதிப்புகளை மீறும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். இந்த மீறல்களில் மிக முக்கியமானது மதத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிப்பதாகும். குடியுரிமை விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை விலக்க நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். முஸ்லிம்களை மட்டுமல்ல கிறிஸ்துவர்களையும் அவர்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்”என்றார் .
முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கிறிஸ்துவ சமூகமும் பிரார்த்தனை மூலம் முதல் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: