வெள்ளி, 29 நவம்பர், 2019

ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் .. எரித்து கொலை ... நான்கு இளைஞர்கள் கைது!


தினமணி :ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது. 26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது உடல் நேற்று தேசிய நெடுஞ்சாலை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்து, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதன்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் வழியில் பிரியங்கா மாயமாகியுள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கச்சிபௌலியில் உள்ள தனது மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு அவர் டோண்டுப்பள்ளியில் உள்ள ஓஆர்ஆர் சுங்கச் சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்துவது வழக்கம். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போது, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

வழியில் அவர் தனது தங்கைக்கு போன் செய்து, வாகனத்தின் டயர் பங்சர் ஆகிவிட்டதாகவும், அடையாளம் தெரியாத இரண்டு பேர் வாகனத்துக்கு பஞ்சர் போட உதவி செய்வதாகவும் கூறியுள்ளார். அதே சமயம், தன்னிடம் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருக்கும்படியும், தனக்கு உதவி செய்யும் நபர்களைப் பார்த்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும் செல்போனில் கூறியுள்ளார். அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்ட குடும்பத்தினர் அவர் மாயமானதாக புகார் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அவரைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், பாலத்துக்கு அருகே எரிந்த நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
சுங்கச் சாவடிக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில், பிரியங்கா தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லுவதும், அங்கே லாரி ஓட்டுநரைப் போல காணப்படும் இரண்டு பேர் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக சொல்வதும், அவருக்கு உதவி செய்ய முன்வருவதும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த பகுதியை ஒட்டிய இடங்களில் தேடுதல்  வேட்டை நடந்து வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஒரு பாலத்துக்கு அருகே எரிந்த நிலையில், பெண்ணின் உடல் இருப்பதை விவசாயி ஒருவர் பார்த்து காவல்நிலையத்தில் தெரிவித்தார்.
உடனடியாக பிரியங்காவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அவர்கள் விரைந்து வந்து, பாதி எரிந்த நிலையில் இருந்து ஸ்கார்ஃப், தங்க நகையை வைத்து அந்த உடல் பிரியங்காவுடையதுதான் என்று அடையாளம் காட்டினர்.
அவரது வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற இடத்தில் இருந்து இந்த இடம் மிக  அருகில் இருந்தது. அவர் எரிக்கப்பட்ட இடத்தில் சில மதுபானப் பாட்டில்களும் இருந்ததைப் பார்த்த காவல்துறையினர், பிரியங்கா பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வநதது.
இந்நிலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது.
விசாரணைநடைபெற்று வந்த நிலையில் கொலைக்கு காரணமானவர்கள் என ஒரு டிரைவர், ஒரு கிளினர் மற்றும் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பிரதமான குற்றவாளி முகமது பாஷா மற்றும் சிவா, நவீன், சென்னகேவலு ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது.
இதற்கிடையே குற்றவாளியை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என்று, மகள் பிரியங்காவை பறிகொடுத்த தந்தை ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார். அத்துடன் ட்விட்டர் பக்கத்தில் #RIPPriyankaReddy என்ற ஹேஷ்டேக் தேசியளவில் தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: