வெள்ளி, 29 நவம்பர், 2019

BBC :தமிழக மீனவர் படகுகள்:விடுவிக்கப்படும் ..ஜனாதிபதி கோத்தபாய அறிவிப்பு! நல்ல நிலையில் கிடைக்குமா?


இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து நடத்திய பேச்சுவார்தைக்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவித்தார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு படகை இழந்த விசைப்படகு உரிமையாளர் அருளானந்தம் உடன் பிபிசி தமிழ் பேசியது.
தனக்கு நேர்ந்த அனுபவங்களை விவரிக்கிறார் அருளானந்தம்.
என்னுடைய படகு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றது. அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை எனது விசைபடகையும் படகில் இருந்த மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்து இலங்கை யாழ்பாணம் அழைத்துச் சென்றனர்."

"பின்னர் ஆறு மாதம் கழித்து இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் எனது படகை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் கடல் சீற்றம், சூறைகாற்று காரணமாக படகு முழுமையாக சேதமடைந்ததால் படகை மீட்டு எடுத்து வர முடியவில்லை. இலங்கையில் முழ்கிய எனது படகின் மதிப்பு ரூபாய் 25 லட்சம். அந்தப் படகை வைத்துதான் நான் என் குடும்பத்தை நடத்தி வந்தேன். படகு சிறைபிடித்ததில் இருந்து எனது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போனது. விசைப்படகு உரிமையாளராக இருந்த நான் வேறொரு விசைப்படகில் மீன் பிடி தொழிலாளராக தற்போது சென்று கொண்டு இருக்கிறேன்," என்கிறார் அருளானந்தம்.
காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் தமிழக மீனவர்களின் படகுகள். (கோப்புப்படம்) "எனக்கு மூன்று குழந்தைகள் அவர்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். இலங்கையில் முழ்கிய எனது விசைப்படகுக்கு இரு நாட்டு அரசும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்," என கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார் அருளானந்தம்.
"கோட்டாபயவின் அறிவிப்பு குறித்து பிபிசி தமிழ் இந்திய - இலங்கை மீனவ பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசுராஜிடம் கேட்டபோது, "இதுவரை இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு தாயகம் திருப்பி எடுத்து வர முடியாத நிலையில் 100க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கையில் உள்ளன அந்த படகின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரு நாட்டு அரசுகளும் இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும்," என்றார்.
"பல ஆண்டு காலமாக நீடித்து வரும் இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்து நடுக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக மீன் பிடிக்க ஜனாதிபதி சந்திப்பில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். மகிந்த ராஜபக்ஷ மீன் வளத்துறை அமைச்சராக இருந்தபோது மீன்களுக்கு எல்லை இல்லை அதே போல், மீனவர்களுக்கும் எல்லை இல்லை என்று கூறியிருந்தார்."
"அதன் அடிபடையில் கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக எல்லை தாண்டி வரும் மீனவர்களை இரு நாட்டு கடற்படைகளும் நடுக்கடலில் வைத்து படகுகளையும், மீனவர்களையும் சோதனை செய்து விடுதலை செய்ய வேண்டும். காரணம் மீனவர்களை கைது செய்து பின் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யும்போது மீனவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி விடுகிறது எனவே சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்," என கூறினார்.
கோட்டாபயவின் அறிவிப்பை பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் எப்படி பார்க்கிறீர்கள் என பாம்பன் நாட்டு படகு மீனவ சங்க தலைவர் அருளிடம் கேட்ட போது, "இந்த அறிவிப்பு பாரம்பரிய நாட்டுபடகு மீனவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தடைபட்டுள்ள இரு நாட்டு மீனவர் பிரச்சனை குறித்த பேச்சுவார்தை குழுவில் பாரம்பரிய மீனவர்களான நாட்டு படகு மீனவர்களையும் இனைத்து பேச்சுவார்தை நடத்தினால் முழுமையாக இந்த மீனவ பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்," என்றார்.
>நாட்டுப் படகு மீனவர்களை பொருத்தமாட்டிலும் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தருவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என ஜனாதிபதியின் அறிவிப்பின் மூலமாகத் தெரியவருதாக பிபிசி தமிழிடம் கூறினார் அருள்.

கருத்துகள் இல்லை: