சனி, 30 நவம்பர், 2019

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங்

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங் மின்னம்பலம் :  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வந்தபின், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து உள்ள போதிலும், பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் 2ஆவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த விவரங்கள் நேற்று(நவம்பர் 29) வெளியிடப்பட்டன.
2ஆவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5 சதவீம் என்ற நிலையில் இருந்தது. அதே சமயம், கடந்த ஆண்டு இதே 2ஆவது காலாண்டில் ஜிடிபி 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6 சதவீதம் குறைந்துள்ளது.

விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு போன்றவை இந்த கடும் வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளாக கூறப்படுகின்றன.
8 முக்கிய ஆதார தொழிற்துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்தது. முக்கியமாக எரிபொருள் மற்றும் சக்தி துறையில்தான் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் துறையில் 5.1 சதவீதம் வளர்ச்சி குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையில் 5.7 சதவீதம் வளர்ச்சி குறைந்துள்ளது. இது போல சிமெண்ட் உற்பத்தில் 7.7 சதவீதம் குறைந்துள்ளது. ஸ்டீல் உற்பத்தில் 1.6 சதவீதம் குறைந்துள்ளது.
கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் தான் ஜிடிபி 4.3 சதவீதமாக இருந்தது.
பொருளாதார நிலையை விட சமூகத்தின் நிலை கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்
இந்நிலையில், நேற்று மாலை தேசிய பொருளாதாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
செப்டம்பர் 2019 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதமாக உள்ளதை சுட்டிக்காட்டிய மன்மோகன் சிங், இதை அதிர்ச்சிகரமான வீழ்ச்சி என்றும் பொருளாதார நிலை கவலை அளிப்பதாகவும் கூறினார். பல தொழிலதிபர்கள் அரசாங்க அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு பயந்து தாங்கள் வாழ்வதாக தன்னிடம் கூறினர் என முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் அவர் விரிவாக கூறும் போது, “எந்த நாட்டிலும் சமூகத்தை பொருளாதாரத்திலிருந்து பிரிக்க முடியாது. தொழில், வேளாண்மை, வர்த்தகம், வேலைகள், வரி, பணவியல் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை என வகைப்படுத்தப்பட்ட நமது பொருளாதாரத்தின் நிலை ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
நமது பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. ஆனால் இன்று நம் சமூகத்தின் நிலை இன்னும் கவலையாக உள்ளது. இது நமது பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மைக்கு ஒரு முக்கிய காரணம். ஒரு நாட்டின் பொருளாதார நிலை அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். பொருளாதாரம் என்பது மக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடையே நிலவும் ஏராளமான பரிமாற்றங்கள் மற்றும் சமூக தொடர்புகளின் செயல்பாடு ஆகும்.
இந்தியப் பொருளாதாரத்தின் கூர்மையான மந்தநிலையையும் குறிப்பாக நமது விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு அது ஏற்படுத்தியுள்ள பேரழிவு விளைவுகளையும் மறுக்கக்கூடியவர் எவருமில்லை.
தற்போதைய ஜிடிபி வளர்ச்சியை(4.5%) ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டின் ஜிடிபி 8-9 சதவீதத்தில் வளர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே முதல் காலாண்டில் 5 சதவீதம் முதல் இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதம் வரை வளர்ச்சி விகிதம் கூர்மையாக சரிந்தது உண்மையில் கவலை அளிக்கிறது.
பொருளாதாரக் கொள்கையில் வெறும் மாற்றங்கள் மட்டும் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது என்பது எனது நம்பிக்கை. பொருளாதாரம் மீண்டும் வலுவாக வளரத் தொடங்க நமது சமுதாயத்தில், தற்போதைய காலநிலையில் நிலவும் பயத்தை நம்பிக்கையாக மாற்ற வேண்டும். பரஸ்பர நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும் சமூக மாற்றங்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் அடிப்படையாகும். ஆனால், நம்பிக்கை மற்றும் தைரியம் தற்போது சிதைந்து வருகிறது.
அரசு மற்றும் பிற நிறுவனங்களில் கொள்கை வகுப்பவர்கள் உண்மையை பேச பயப்படுகிறார்கள். ஊடகங்கள், நீதித்துறை, ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் விசாரணை நிறுவனங்கள் போன்ற சுயாதீன நிறுவனங்களின் மீதான பொது நம்பிக்கை கடுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தன்னை ஒரு மீட்பராக நிலைநிறுத்தியுள்ளது. ஆனால், பணமதிப்பழிப்பு போன்ற முட்டாள்தனமான கொள்கைகளை நாடியது, பொருளாதாரத்திற்கு பேரழிவு தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெற, அரசாங்கம் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஊக்குவிப்பது மிகவும் முக்கியம்” எனக் கூறினார் மன்மோகன் சிங்.

கருத்துகள் இல்லை: