புதன், 27 நவம்பர், 2019

சமுக நீதி காவலர் வி பி சிங் ! வெறும் 11 மாதங்களே பிரதமராக இருந்து .... நவம்பர் 27 - நினைவுதினம்

Sivasankaran Saravanan : தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தில் கலைஞரின்
உதவியாளர் திரு. சண்முகநாதனிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது! தேசிய அளவில் உள்ள தலைவர்களில் கலைஞர் யாரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்? என. அதற்கு அவர் சொன்ன பதில் வி.பி சிங்!
யார் இந்த வி பி சிங்?! வெறும் 11 மாதங்களே இந்த நாட்டை ஆட்சி செய்த இவர் பெயரைக்கேட்டால் இன்றும் மதவாத சக்திகள், பார்ப்பனிய சக்திகள் அலறுவது ஏன்??
1950 ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமல்படுத்துகிறார் அண்ணல் அம்பேத்கார்! ஆங்கிலேயர்கள் செய்த நிர்வாக நடவடிக்கைகளால் பட்டியல் வகுப்பினர் என்ற பிரிவு மட்டுமே அப்போது இந்திய அரசிடம் இருந்தது! யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற விபரம் இல்லை. எனவே பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடை செயல்படுத்துகிற அம்பேத்கார், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளங்காண பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை அமைக்கிறார்!
1978 ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியில் அந்த ஆணைய வழிகாட்டுதலில் மண்டல் என்பவரது தலைமையில் கமிசன் ஒன்று அமைக்கப்படுகிறது!
தமிழ்நாடு கேரளாவில் எப்படி எல்லா சமூகங்களும் ஒன்றுபட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறுகின்றன, மருத்துவம் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் எப்படி அந்தந்த மக்களிடமிருந்தே உருவாகிறார்கள் என்பதை ஆய்வு செய்கிறது! அதற்கு காரணம் அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு தான் என புரிந்துகொள்ளப்படுகிறது.
சுமார் 3700 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என கண்டறியப்பட்டு மத்திய அரசின் பணிகளில் 27% பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என 1980 ல் அந்த கமிசன் அறிவிக்கிறது!
மத்திய அரசுப்பணிகளில் A grade officers ஆக முழுக்க பார்ப்பனர்கள் மற்றும் உயர் வகுப்பினர் தான் இருந்துவந்தார்கள். அவ்வளவு ஏன் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது!
மண்டல் கமிசன் பரிந்துரைகளை 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது! 1989 ல் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு பிரதமரானார் வி பி சிங்! இதில் வேடிக்கை என்னவென்றால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, ராஜீவ்காந்தி பிரதமராக விடாமல் தடுப்பதற்காக பாஜக கூட வெளியிலிருந்து அவருக்கு ஆதரவு தந்தது!
அப்படிப்பட்ட பலவீனமான ஆட்சியை வைத்துக்கொண்டு மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவெடுக்கிறார்! காங்கிரஸ், பாஜக உள்பட நாடு முழுவதும் பார்ப்பனிய சக்திகள் கைகோர்த்துக்கொண்டு அதை கடுமையாக எதிர்க்கிறார்கள்! இருந்தும் எதிர்ப்புகளை மீறி 27% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார்! திராவிட முன்னேற்க்கழகத் தலைவர் கலைஞர், சமூகநீதி காத்த காவலர் வி பி சிங் என புகழாரம் சூட்டுகிறார்! ரதயாத்திரை ஆரம்பித்திருந்த அத்வானி பாஜக வின் ஆதரவை திரும்பப்பெறுகிறார்!
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வருகிறது! மண்டல் கமிசன் அமல்படுத்துவதை எதிர்த்து சுமார் 10 மணி நேரங்கள் பேசுகிறார் ராஜீவ்காந்தி! எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்க பேச ஆரம்பித்த பிரதமர் விபி சிங்,
"டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் இவர்களுக்கு நன்றி! " என்று சொல்லித்தான் பேச்சையே தொடங்குகிறார்! "இன்று நாடாளுமன்றத்தில் இரண்டு பிரிவுகள் : 1. சமூகநீதியை காக்கிற பிரிவு, 2. சமூகநீக்கு எதிரானவர்கள், யார் யார் எப்படி என்பதை மக்கள் பார்க்கிறார்கள்! " என்றார்! வாக்கெடுப்பின் முடிவில் தோற்கடிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார் விபி சிங்!
வெறும் 11 மாதங்களே ஆட்சி செய்த வி பி சிங் ஆட்சிக்காலத்தில் தான் அண்ணல் அம்பேத்காருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது! எம்ஜியார்க்கு எல்லாம் வழங்கி முடித்த பிறகு தான் அம்பேத்காருக்கு வழங்கப்பட்டது ஏன் என்றால் இதனால் தான்! இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைத்தவரும் இவரே!
1991 ராஜீவ் படுகொலை க்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் தூக்கி எறியப்பட்டார் வி பி சிங் என்றொரு மாணிக்க முத்து! ஆனாலும் அவர் வரலாற்றில் நிரந்தரமாக வாழ்கிறார்..!
நவம்பர் 27 - வி பி சிங் நினைவுதினம்
#விபி_சிங்
#சமூகநீதி_காவலர்

கருத்துகள் இல்லை: