வியாழன், 26 செப்டம்பர், 2019

அமைச்சர்களுக்கு தந்த கோடிகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஓப்பன் வாக்குமூலம்!

அமைச்சர்களுக்கு தந்த கோடிகள்: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஓப்பன் வாக்குமூலம்!மின்னம்பலம் : சென்னையில் நேற்றைய தினம்(25.09.19) தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் சைதாப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி அறிவித்த தகவல்கள் தமிழ் சினிமாவிலும் உளவுத்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த வருடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியது. அதன் பின்னர் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பாக சில கோரிக்கைகள் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
அதில்,
;உடனடியாக திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்திக் கொள்வது,
;சமமற்ற, சீரற்ற டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தி உயர்த்தி அரசு ஆணை பிறப்பிப்பது,
;திரையரங்கு உரிமத்தை வருடந்தோறும் புதுப்பிக்கும் நடைமுறையை, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது
;தற்போதுள்ள பெரிய திரையரங்குகளை அதன் கட்டமைப்புக்குள் இரண்டு அல்லது மூன்று திரையரங்குகளாக கட்டிக்கொள்வதற்கு அனுமதிப்பது
ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை வெற்றிகரமாக நடத்திக்கொடுக்க திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு கொடுப்பதற்கு என்று தியேட்டர் உரிமையாளர்களிடம் நிதி வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான சங்கத்தின் தலைவர் R.M.அண்ணாமலை, “1976ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை தொடங்கிய கண்ணாயிரம், இராமானுஜம் போன்ற முன்னோடிகள் சட்டத்திற்குப் புறம்பாக திரையரங்கு உரிமையாளர்கள், திரையரங்க உரிமையைப் பெறுவதற்கு எப்போதும் முயற்சித்ததில்லை. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். ” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதேசமயம் சென்னையில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம், கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. திரையரங்கு உரிமையாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட சங்கங்களில் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதை விடுத்து சங்க அலுவலகத்தில் இதுபோன்ற பஞ்சாயத்து பேசி, அதன்மூலம் கமிஷன் வாங்குவது தவறான நடவடிக்கை என்று அண்ணாமலை, கணபதிராம் தியேட்டர் உரிமையாளர் ஜெயகுமார், சத்தியசீலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் இப்படியொரு பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கொங்கு மண்டலத்தில் மட்டும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திவந்த, சினிமாவில் சு.பா என்று அழைக்கப்படும் திருப்பூர் சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் தன்னுடைய ஆளுமை அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காக, சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வத்துடன் இணைந்து புதிய அமைப்பை தொடங்குவதற்கு முயற்சித்தார். அதன் விளைவாக 20.12 .2018 அன்று தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம், செயலாளராக ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளராக சேலம் இளங்கோ ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்போது தான் அரசாங்கத்துடன் நேரடித் தொடர்பில் தங்களை இவர்கள் இணைத்துக்கொண்டனர். இதற்குப் பாலமாக இருந்தவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

சங்கத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழக அரசு திரைப்படத்துறை சார்ந்து நடத்துகின்ற அதிகாரபூர்வமான கூட்டங்களில் சங்கத் தலைவர் என்ற முறையில் திருப்பூர் சுப்பிரமணி கலந்து கொள்ளத் தொடங்கினார். அப்போதே அரசிடம் தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முழுவதும் நிதி வசூலித்து அமைச்சர்களுக்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவு ஒற்றுமையுடன் தொடங்கப்பட்ட அமைப்பில் இப்போது ஏன் இந்த விரிசல் என விசாரித்தபோது, இவர்களது நடவடிக்கைகளை அருகிலிருந்து கவனிக்கும் பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் “வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் ‘யாருக்கு கொடுக்கப்பட்டது, பாக்கி பணம் யாரிடம் உள்ளது?’ இது எதுவுமே பொதுச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக சங்கப் பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ரோகிணி பன்னீர்செல்வத்துக்கு இதனை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவரது ஆதரவாளர்களை ‘எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? யாருக்கு கொடுக்கப்பட்டது? பாக்கி பணம் யாரிடம் உள்ளது?’ என்கிற கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்க வைத்தார். நிதி விஷயங்களில் வெளிப்படைத் தன்மையோடு பேசக்கூடியவர் திருப்பூர் சுப்பிரமணி. பொதுப் பணத்தை சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தாத குணம் கொண்ட தன்னை நோக்கி இப்படிப்பட்ட கேள்விகள் வருவதை திருப்பூர் சுப்ரமணி விரும்பவில்லை. அதனால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை நேற்று(25.09.19) நடைபெற்ற கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் இதுதான் தற்போது பல்வேறு விவாதங்களை தமிழ் சினிமா வட்டாரத்தில் எழுப்பியிருக்கிறது.” என்று கூறினார்.

நேற்று(25.09.19) சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலில், திருப்பூர் சுப்பிரமணி தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. தீபாவளிக்குள் இணைய வழி டிக்கெட் பதிவு முறைப்படுத்துவது குறித்து இன்று(26.09.19) அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சென்னையில் முகாமிட்டிருந்தனர். எனவே, இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடிவெடுத்து இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் வந்திருந்ததால், கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறினார் கூட்டத்துக்குச் சென்றுவந்த ஒருவர். அவரிடம் அங்கே பேசப்பட்டவை குறித்து விசாரித்தபோது “விழாவில் திருப்பூர் சுப்பிரமணியம், ரோகிணி பன்னீர்செல்வம், அரூர் ராஜா, சேலம் இளங்கோ, கரூர் மீனாட்சி மற்றும் பலர் பேசினார்கள். இன்றைய பேச்சுவார்த்தை குறித்தே பொதுவாக அனைவரும் பேசினாலும், சங்கத்தின் நிதியைப் பற்றிப் பேசினார் திருப்பூர் சுப்பிரமணி. வெளிப்படைத்தன்மையுடன் பேசப்போவதை முன்கூட்டியே திட்டமிட்டதால், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமிருந்தும் அனைத்துவிதமான எலெக்ட்ரானிக் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்ட பின்னரே கூட்டம் நடைபெற்ற அறைக்குள் அனுமதித்தார்கள். செல்ஃபோன்கள் இல்லாததால், யாராலும் ஒரு அணியாக அமர முடியவில்லை. கிடைத்த இடத்திலேயே அமர்ந்தனர். இரு தரப்பின் ஆதரவாளர்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்ளத் தொடங்கி பேச்சு நீண்டபோதே, பலருக்கும் விஷயம் தெரிந்துவிட்டிருந்தது. ஆனாலும், தன்னைப் பற்றிய கேள்விக்கு தானே பதில் சொல்ல விரும்பிய திருப்பூர் சுப்பிரமணி பேசத் தொடங்கினார். அப்போது ‘சங்கத்துக்கு சேர்ந்த நிதி பத்தி யாருக்கும் சந்தேகம் வராம நடந்துக்கவேண்டியது சங்கத் தலைவரா என்னுடைய கடமை. அதனால, சங்கம் தொடங்கி ஒரு வருஷம் ஆகப்போறதால, அதைப் பத்தின சில தகவல்களை உங்ககிட்ட இப்ப சொல்லிடுறேன். நம்ம திரையரங்க உரிமையாளர்கள்கிட்ட வசூலித்த மொத்தப் பணத்துல அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு 1 கோடியே 10 லட்ச ரூபாயும், அமைச்சர் வேலுமணிக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாயும் கொடுத்திருக்கோம். சங்கம் தொடங்குறதுக்கு 26 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கோம்.’ என பகிரங்கமாக திருப்பூர் சுப்பிரமணி அறிவித்தார். இப்படி அவர் வெளிப்படையாக பேசியதால், தமிழ் சினிமாவின் மற்ற சங்கங்களே ஆடிப்போய்விட்டன” என்கிறார்.
மேலும் “கொடுக்கப்பட்டது போக பாக்கி பணம் 60 லட்ச ரூபாய் அபிராமி ராமநாதன் வசமும், தன்னிடம் 70 லட்ச ரூபாய் , சேலம் இளங்கோவிடம் 40 லட்ச ரூபாய் கைவசம் இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணி கூறிய பின்னர், அங்கிருந்தவர்களால் வேறு கேள்விகள் கேட்கமுடியவே இல்லை. நிதி விஷயங்களிலும் அரசுடன் நடத்தக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிற விஷயங்களில் ரோகிணி பன்னீர்செல்வம் தவிர்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவருடைய பொறுப்புக்கு சேலத்தை சேர்ந்த அருண் ராஜா என்பவரை கொண்டுவருவதற்கு திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் பேச தொடங்கிவிட்டனர்” என்கிறார். இது சம்பந்தமாக திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில் பேசியபோது “வரவு செலவு விஷயத்தில் திருப்பூர் சுப்பிரமணி வெளிப்படையாக நடந்து கொள்ளக் கூடியவர். பன்னீர்செல்வம் அதற்கு நேர் எதிராக செயல்படக்கூடியவர். அதனால் தான் நிதிப் பொறுப்புகளை ரோகிணி பன்னீர் செல்வத்திடம் கொடுக்கவில்லை” என்று கூறுகின்றனர். மேலும், அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அல்லது அமைச்சர்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கு பன்னீர்செல்வத்தால் ஏற்பாடு செய்ய இயலாது. இதனால் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் வேலை தொடங்கியுள்ளது என்கின்றனர்.
-இராமானுஜம்.

கருத்துகள் இல்லை: