சனி, 24 ஆகஸ்ட், 2019

காஷ்மீர்: திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்!


மின்னம்பலம் : காஷ்மீருக்கு. தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாமல்
திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அம்மாநில தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் கடந்த 22ஆம் தேதி திமுக தலைமையில் 14 கட்சிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்குச் சென்று ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், திமுகவின் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித் மேமன், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத்யாதவ் உட்பட 12 பேர் UK 643 விமானத்தில் காஷ்மீர் சென்றனர். அங்கு தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யவிருந்தனர். காஷ்மீர் தலைவர்களைச் சந்திக்க இருந்தனர்.

ஏற்கனவே எதிர்க்கட்சியினர் வரவேண்டாம் என்று தெரிவித்திருந்த காஷ்மீர் நிர்வாகம், மதியம் 2 மணியளவில் ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வந்த 12 பேரையும் திருப்பி அனுப்பியுள்ளது. அப்போது பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சியினரை சந்திக்க முயன்றுள்ளனர். அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
டெல்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில் நிலை கட்டுக்குள் இருக்கிறது என்று அரசு கூறுகிறது. அப்படியானால் ஏன் காஷ்மீருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. காஷ்மீர் தலைவர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் ஏன் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை: