செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அமித் ஷா : சிதம்பரத்தை உடனே கைது செய்யாதது ஏன்? கடுகடுத்த அமித் ஷா ..

amith shap.chidambaram`உடனே கைதுசெய்யாதது ஏன்?' - ப.சிதம்பரம் விவகாரத்தில்  கடுகடுத்த அமித் ஷா . 
vikatan.com - கலிலுல்லா.ச - ஆர்.பி.: `ஜாமீன் வாங்கியிருந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லாதபோது ஏன் கைது செய்யவில்லை?’ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அதேபோல, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கையும் கருத்தில்கொண்டு, இரண்டு வழக்கிலும் தன்னைக் கைது செய்யக்கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம்.

ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில் கைது செய்வதற்கான தடையை நீட்டித்துக்கொண்டேவந்தார் அவர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன.
அதைத் தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் இன்று தள்ளுபடிசெய்தார். இதை எதிர்த்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மேல்முறையீடு செய்துள்ளார். தமது மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, ப. சிதம்பரத்தின் மனுமீது நாளை விசாரணை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகளும் அமலாக்கத்துறையும் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு வந்துசென்றுள்ளனர்.





இதுதொடர்பாக விசாரித்தபோது,``முன்ஜாமீன் மறுக்கப்பட்டபோதே, ஏன் சிதம்பரத்தை கைதுசெய்யவில்லை என்று அமித்ஷா தரப்பிலிருந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையைத் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் நிர்மலா சீதாராமனிடமும் பேசியிருக்கிறார் அமித்ஷா. `உடனே கைது செய்யவேண்டியது தானே? அதில் என்ன சிக்கல், ஜாமீன் வாங்கியிருந்தால் விட்டுவிடலாம். அப்படி இல்லாதபோது ஏன் கைதுசெய்யவில்லை’ என சரமாரியாக அதிகாரிகளிடம் கடுகடுத்துள்ளார் அமித்ஷா என்கிறார்கள்.



இதையடுத்துதான் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்குச் சென்றுள்ளதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. நிர்மலா சீதாரமானிடமும் பேசியிருக்கிறார். அதன் எதிரொலிதான் தம்பரத்தின் வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் வந்தது எனச் சொல்கிறார்கள். நாளை மேல்முறையிட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பே சிதம்பரத்தை கைதுசெய்வதுதான் திட்டம்.


p.chidambaram



இதற்கிடையில், சட்டரீதியான ஆலோசனையில் இறங்கியுள்ளார் ப.சிதம்பரம். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, `சிதம்பரம் தலைமறைவு’ என்று செய்தியை கசியவிட்டு, சிதம்பரத்தை தானாக வரவழைத்துவிடலாம் என்று திட்டம் தீட்டியிருக்கிறார்கள்” என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இன்றிரவுக்குள் கைது படலம் இருக்கும் என்கின்றனர்.

இந்தநிலையில், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ராஜீவ்காந்தியின் 75 பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


k.s.azhagiri




அப்போது பேசிய அழகிரி, ``மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார் சிதம்பரம். அதனால் அவரைக் கைதுசெய்ய மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை: