வியாழன், 11 ஜூலை, 2019

நளினி சிதம்பரம் பேட்டிதான் அனிதா உயிரைப் பறித்தது’ ... அமைச்சர் விஜபாஸ்கர்

vikatan.com - -khalilullah.s" : சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `நளினி சிதம்பரத்தின் பேச்சுதான், அனிதாவின் உயிரைப் பறித்தது’ என்று பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இதையடுத்து தி.மு.க சார்பில் நீட் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டுவந்தார்.
 அப்போது பேசிய அவர், ``நீட் தேர்வு தொடர்பாக 2 மசோதாக்கள் அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு, அது குடியரசு தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த கடிதம், தமிழக சட்டத்துறை செயலாளருக்கு வந்துள்ளது. ஆனால் இதை அரசு மற்றும் சட்டதுறை அமைச்சர் சொல்லாமல், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விவாதத்தில் மறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது, இரு மசோதாக்களையும், மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்ததாகவும், பின் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.



குடியரசு தலைவர், திருப்பி அனுப்பிய விவகாரத்தை ஏன் அவையில் தெரிவிக்கவில்லை. சட்ட அமைச்சரே உண்மை தகவலைக் கூறாமல் மறைத்திருக்கிறார் என்பது எனது குற்றச்சாட்டு. இதன் மூலம் தமிழக மக்களை, இந்த அரசு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு பச்சை துரோகம் செய்திருக்கிறது” என்று ஆவேசமாகப் பேசிய ஸ்டாலின், இதற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.






நீட் தேர்வுஇதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``அப்படி எதிர்கட்சித்தலைவர், சொன்னபடி மசோதா திருப்பி அனுப்பப்பட்டால், சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். நீட் விவகாரத்தில் நான் பொய்சொல்வதாகக் கூறிய ஸ்டாலின் அதை நிரூபித்தால், பதவி விலக நான் தயார், நிரூபிக்க முடியாவிட்டால் ஸ்டாலின் பதவி விலக தயாரா” என்று தெரிவித்துள்ளார்.





எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீண்டும் குறுக்கிட்டு, ``மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய தகவலைக் கூட, அமைச்சராக அவைக்கு தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் இந்தப் பிரச்னையை எழுப்பியதன் காரணமாகவே இதை தெரிவித்தார். முன்கூட்டியே அவையில் ஏன் எந்தத் தகவலையும் கூறவில்லை எனக் கேள்வி எழுப்பி, பல மாதங்களாக தகவலை தெரிவிக்காமல், தற்போது தெரிவித்து, பொதுமக்களை அரசு ஏமாற்றி உள்ளது. இது மாணவர்கள் பிரச்னை, அமைச்சர் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவது சரியல்ல எனவும், இது பொறுப்பற்ற செயல் எனவும்” விமர்சனம் செய்தார்.






அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, ``மசோதா நிராகரிக்கப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்து இருந்தால் அதைத் தெரிவித்து இருப்போம். ஆனால், நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கும் நிராகரிக்கப்பட்டிருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆகவே, எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான வழக்கை அ.தி.மு.க அரசு சந்தித்து வருகிறது” என்றார்.





மீண்டும் குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பல முறை இது தொடர்பாக விளக்கம் கேட்டும், மாறுப்பட்ட தகவல்களை அமைச்சர்கள் கூறியது ஏற்புடையதாக இல்லாததால், அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே விவகாரத்தில், விளக்கமளிக்க சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.








ஸ்டாலின்
இதைத்தொடர்ந்துபேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``நீட் விலக்கை எதிர்த்து வழக்கு தொடுத்து வாதாடிய நளினி சிதம்பரமும், காங்கிரஸ் கட்சியும்தான் அனிதா உள்ளிட்ட தமிழக மாணவிகளின் தற்கொலைக்குக் காரணம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: