வியாழன், 11 ஜூலை, 2019

வைகோ உட்பட ஆறு பெரும் மாநிலங்கள் அவைக்கு தெரிவு செய்யபட்டனர் . சான்றிதழ் பெற்றனர்



தினகரன் :சென்னை: மாநிலங்களவைக்கு தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் தேர்வானது குறித்து ஆதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6  மாநிலங்களவை எம்பி பதவிகள் இந்த மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் வருகிற 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. அதில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு எம்பியை தேர்வு செய்ய 34  எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்படி திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 எம்பி பதவி கிடைப்பது உறுதியானது. திமுக சார்பில் தொமுச  பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் வைகோவும் மனு தாக்கல் செய்தனர்.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன், கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி  ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.


இந்தநிலையில் வைகோவுக்கு தேச துரோக வழக்கில் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்று  பேசப்பட்டது. இதனால் திமுக சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, புதியதாக மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் மீது நேற்று முன்தினம்  (9ம் தேதி) பரிசீலனை நடைபெற்றது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த வைகோ உள்ளிட்ட 7 பேர் மனுக்களும் ஏற்றுக்  கொள்ளப்பட்டன.இந்தநிலையில் திமுக மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, நேற்று காலை 11 மணிக்கு தலைமை செயலகம் வந்து, சட்டப்பேரவை  செயலாளர் சீனிவாசனை சந்தித்து, தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் வருகிற 18-ம் தேதி தமிழகத்தில் 6 மாநிலங்களவை  எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறாத சூழல் இருந்த நிலையில், 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று தேர்தல்  ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் வைகோ மாநிலங்களவை  உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் பா.ம.க. சார்பில் அன்புமணி மாநிலங்களவை  உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கும் சான்றிதழை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் வழங்கினார்.  தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் பா.ம.க. சார்பில் அன்புமணி  உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். <

கருத்துகள் இல்லை: