சனி, 13 ஜூலை, 2019

தொல்..திருமாவளவன் : ரெயில்வே பணியில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வீடியோ


தினத்தந்தி : மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு. ரெயில்வே பணி நியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
 புதுடெல்லி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசிய போது கூறியதாவது:- ரெயில்வே பணிநியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 80 சதவீத பணியிடம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது.
கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
திருச்சி பொன்மலையில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வட இந்தியாவை சேர்ந்த 1,600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 165 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, ரெயில்வே பணிநியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். என்னுடைய தொகுதியான சிதம்பரம் சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு உலக புகழ்பெற்ற சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு சிதம்பரம் வழியாக வாரம் 3 நாள் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. இந்த ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: