வெள்ளி, 12 ஜூலை, 2019

காங்கிரசை அழித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே.. ஆர் எஸ் எஸ் இன் ரகசிய உளவாளிகள் காங்கிரசுக்குள் ..?

ஜீவா வனத்தையன் தமிழரிமா : 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி
காங்கிரஸ்காரர்களால் தனித்து விடப்பட்டார். செந்நாய்கள் மத்தியில் சிக்கிய செம்மறியாக, ஓநாய்கள் கூட்டத்தில் சிக்கிய மான்குட்டியாக தனியாகப் போராடிய ராகுல்காந்திக்கு தோள்கொடுக்க ஒரு காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை. அப்படி ஒரு இக்கட்டான நிலை இந்தியாவில் எந்த வாரிசு தலைமைக்கும் வந்ததில்லை.
ராகுல்காந்தியை எந்த அளவுக்கு இழிவுபடுத்த முடியுமோ , அந்த அளவுக்கு பப்பு என்றெல்லாம் சொல்லி இழிவுபடுத்திய பாஜகவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரசில் யாரும் முன்வரவில்லை. மோடி பற்றி, ஆர் எஸ் எஸ் பற்றி ராகுல் வாயைத் திறந்த போதெல்லாம் பாஜகவினர் துவங்கி, தேர்தல் ஆணையம், உச்சநீதி மன்றம் என அனைவரும் வரிசைக்கட்டி வந்தனர். ராகுல் பரப்புரைக்கு இடையே இந்தப் பிரச்சினையும் கையாள வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்பட்டார்.
மாநிலக் கட்சிகளோடு விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்கலாம் என்று முயன்றால் காங்கிரசின் மாநிலத் தலைவர்கள் அதற்கும் முட்டுக்கட்டையாக நின்றனர். தன் கட்சியினரின் சுயநலப்போக்கால் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ள ராகுல் தயங்கினார் என்பதுதான் கொடுமை.
இங்கே நாம் ராகுலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையிலும் தொடர்ந்து இந்திய அரசியலில் நுழைந்து தங்கள் உயிரைக் களப்பலியாக்கும் ஒரு குடும்பத்தை மீறி ஏன் நாட்டுக்காக தியாகம் செய்ய எந்த காங்கிரஸ் தலைவரும் முன்வரவில்லை..?
இந்தியா முழுமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாகவுள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை அனுபவிப்பதற்காக அந்த கட்சியையே சுற்றி வரும் காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறார்கள் ? காங்கிரசுக்கு ஆளும் வாய்ப்பு கிடைக்கும் போது அதிகாரத்திற்கு ஆளாய் பறக்கும் காங்கிரசார் கட்சியை வலுப்படுத்த எந்த முயற்சியையும் செய்வதே இல்லை. எல்லோருமே பதவி சுகத்திற்காக மட்டுமே அக்கட்சியில் தொடர்கின்றனர்.
காங்கிரசை அழிக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் ம், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக சீறும் போது காங்கிரஸ் தலைவர்கள் அந்த ஆர் எஸ் எஸ் க்கும், பாஜகவுக்கும் ரகசிய உளவாளிகளாக சொந்த கட்சிக்குள்ளேயே உளவு பார்க்கும் ஈனச்செயல் தான் இந்தியாவில் நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரி கட்சிக்கு வெளியே இல்லை, கட்சிக்குள்ளேயே தான் இருக்கின்றனர். அவர்களை களையெடுக்கும் வரை காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியாது..!!
தற்போது கூட கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்வதில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை துரோகமும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர்களின் கட்சி துரோகமும் தான் பாஜக வின் ஆப்பரேஷன் தாமரைக்கு வலுசேர்ப்பதாக உள்ளது என்பதை யாரால் மறுக்க முடியும்..? இன்னும் எத்தனை ஆட்சிகள் கவிழப்போகின்றனவோ இந்த காங்கிரஸ் துரோகிகளால்..!!

கருத்துகள் இல்லை: