திங்கள், 8 ஜூலை, 2019

மத்திய அரசை கண்டிக்க முடியாது .. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்

மத்திய அரசைக் கண்டிக்க முடியாது: துணை முதல்வர்மின்னம்பலம் : நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து
தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டமன்றத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து  விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும்
நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் கடந்த 7ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால், இதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்ற தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர். சட்டமன்றத்தில் இன்று (ஜூலை 8) கேள்வி நேரம் முடிந்த பிறகு நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும். அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். 27 மாதங்களாக கிடப்பில் போட்டு தற்போது நிராகரித்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது போலதான் மாநில அரசுக்கு உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்த மத்திய அரசின் செயலைக் கண்டிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “சட்டமன்ற தீர்மானங்களை பரிசீலிப்பது குடியரசுத் தலைவரின் பணி. எனவே மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என்று கூற, அப்படியென்றால் மத்திய அரசை வலியுறுத்தியாவது தீர்மானம் நிறைவேற்றுங்கள் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனோ, “மத்திய அரசை வலியுறுத்துவதில் அரசுக்கு என்ன பிரச்சினை” என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கருத்தை கேட்டறிந்து மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: