திங்கள், 10 ஜூன், 2019

தமிழகம் இந்தியாவின் குப்பைத்தொட்டியா? வீடியோ


தினகரன் :பொது மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் எதுவானாலும் அதை தமிழகத்திற்கு கொண்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. விவசாய பூமி என்ற அந்தஸ்தோடு முப்போகம் விளைந்த தமிழகத்தின் வேளாண் முகம் சமீபகாலமாக மாறி கொண்டிருக்கிறது. காவிரி படுகைகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள், தேனியில் நியூட்ரினோ, வனப்பகுதியை அழித்து தேசிய நெடுஞ்சாலைகள் என மத்திய அரசின் திணிப்பு திட்டங்கள் தமிழகத்தில் அதிகம். அதன் மற்றொரு வடிவமாக இப்போது கூடங்குளத்தில் அணுகழிவுகளை சேமிக்கும் மையம் வெளியாகியுள்ளது.
கூடங்குளத்தில் புதிய அணுஉலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அணுக்கழிவுகளை சேமிக்கும் மையத்தையும் அங்கேயே அமைத்திட தற்போது மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பில் அணுக்கழிவுகளை உலைகளுக்கு வெளியே வைப்பதற்கான வசதிகளை 5 ஆண்டுகளில் ஏற்படுத்த கேட்டுக் கொண்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதை கண்டு கொள்ளவில்லை. இப்போது வேறு வழியின்றி அதையும் நெல்லை மாவட்டம் கூடங்குளம் வளாகத்தில் அமைக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகும்.


கர்நாடகா மாநிலம் ேகாலார் தங்க வயலில் அமையவிருந்த அணுக்கழிவு மையம் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடங்குளத்திலேயே அணுக்கழிவுகளையும் சேமித்தால் அதன் கதிர்வீச்சு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்தோடு இருக்கும். கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் உடல்நலம், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். கடல் வளம் அழிவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரம் அழியவும் வாய்ப்புள்ளதாக எதிர்ப்பாளர்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமையும்போது, அதை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உருவெடுக்கும். அணுஉலைகளால் அப்பகுதிகளில் நசிந்து வரும் தொழில் வளம், மென்மேலும் அழியக்கூடும். அணுஉலைகளோடு, அணுக்கழிவு மையமும் அமைக்கப்பட்டால் இயற்கை பேரிடர் வரும்போது தென்தமிழகமே கடும் பாதிப்புக்குள்ளாகும். பிற மாநிலங்கள் எதிர்க்கும் திட்டங்களை கொண்டு வந்து, இந்தியாவின் குப்பை தொட்டியாக தமிழகத்தை மாற்றுவதை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்த அணுக்கழிவு மையத்தை வேறு மாநிலத்தில் அமைத்தால்தான் அம்மாநில மக்களின் எதிர்ப்பு எத்தகையது, உண்மையிலேயே தமிழகத்தின் உணர்வு எத்தகையது என்பது மத்திய அரசிற்கு புரியும்.

கருத்துகள் இல்லை: