செவ்வாய், 11 ஜூன், 2019

நாங்குநேரி திமுகவுக்கே: உதயநிதி போட்ட துண்டு!

நாங்குநேரி  திமுகவுக்கே: உதயநிதி போட்ட துண்டு!மின்னம்பலம் : நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்தால் எளிதில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று உதயநிதி கூறியுள்ளார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை திறப்பு விழா நேற்று (ஜூன் 10) நடைபெற்றது. கலைஞரின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கு, திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அண்மைக் காலமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், நேற்றைய நிகழ்வில் உதயநிதிக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

நான் அதிக நேரம் பேசமாட்டேன், பேசுறத விட செயல்ல காட்டுறதுதான் முக்கியம் என்று பேச்சைத் தொடங்கிய உதயநிதி, “கட்சியில் எனக்கு புதிதாக ஒரு பொறுப்பை கொடுக்கப் போவதாக நாளிதழ்கள், ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த சமயத்தில் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்ற ஒரு பொறுப்பு போதும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தலைவரை முதல்வராக்குவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என்று தெரிவித்தார்.
எல்லோரும் திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்கிறார்கள். ஆமாம், இது குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கலைஞர், எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான். அதனால்தான் திமுக குடும்பக் கட்சிதான் என்றவர், திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரை நோக்கி, “நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரவுள்ளது. அதனை திமுகவுக்கு விட்டுக்கொடுத்தால் நாங்கள் எளிதாக வெற்றிபெற்று விடுவோம். இது ஒரு கோரிக்கைதான்” என்றும் வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். விரைவில் அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், “நாங்குநேரி காங்கிரஸின் தொகுதி. இரண்டு முறை அங்கு நான் வெற்றிபெற்றுள்ளேன். காங்கிரஸ் தொகுதி என்பதால் நாங்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம்” என்று வசந்தகுமார் தெரிவித்திருந்தார். மேலும் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், உதயநிதியின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: