சனி, 15 ஜூன், 2019

அஸாத் ஸாலி : கோட்டா - சஹ்ரான் நெருக்கமான உறவு .. வாய்திறக்காமல் இருக்க 500 மில்லியன் ரூபா தருவதாக ..

puthusudar.lk : கோட்டா - சஹ்ரான் நெருக்கமான உறவு
வாய்திறக்காமலிருக்க 500 மில்லியன் ரூபா பேரம் பேசினர்;
தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்தார் அஸாத் ஸாலி
"முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தெளஹீத் ஜமா அத்தின் தவறான செயற்பாடுகள் குறித்துப் பேசிய காரணத்தால்தான் நான் கைதுசெய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, அவர்கள் குறித்து வாய்திறக்க வேண்டாம் எனக் கோட்டாபயவின் புலனாய்வுத் துறையினர் வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாகப் பேரம் பேசினார்."
- இவ்வாறு போட்டுடைத்தார் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி.
உயிர்த்த ஞாயிறு தினமன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கின்றதா? இல்லையா? எனத் தெரிந்துகொள்ள முடியாத காலகட்டத்தில் என்னைச் சாட்சியத்துக்கு அழைத்துள்ளீர்கள். எனினும், நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு அடிப்படைவாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் இது குறித்து பல தடவைகள் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். 2014இல் இருந்து பல தடவைகள் இது குறித்து பேசப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 1995 இல் இருந்து இன்று வரையிருந்த அனைத்து அரசுகளும் பொறுப்புக்கூற வேண்டும். இந்த அடிப்படைவாதத்தைப் பற்றி 2000ஆம் ஆண்டிலிருந்தே தெரிவித்து வருகின்றேன்.
அப்போதிருந்த பாதுகாப்புச் செயலர்களிடம் தகவல்களை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம்.
முன்னைய ஆட்சியாளர் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பலமாக செயற்படுகின்றது எனக் கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால், கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், கோட்டாபாய ராஜபக்சவுக்கும், தௌஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பைப் பற்றி பேசியதால்தான் நான் கைதுசெய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல அவர்கள் குறித்து வாய்திறக்க வேண்டாம் என எனக்குக் கோட்டாபயவின் புலனாய்வுத்துறையினர் அறிவுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணம் தருவதாகப் பேரம் பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் அதில் 200 மில்லியன் ரூபாவைச் செலவழிக்கவும் ஆலோசனை வழங்கினார்கள்.
கடந்த காலங்களில் காத்தான்குடியில் நடந்த பல அசம்பாவிதங்களுக்கு சஹ்ரான் காரணமாக இருந்தார். இது குறித்து முஸ்லிம் மக்கள் முறைப்பாடுகள் செய்தபோதும், பொலிஸார் சஹ்ரான் பக்கமே நின்றனர். சஹ்ரானைக் கைதுசெய்ய கிழக்கில் ஆர்ப்பாட்டம்கூட நடத்தினார்கள். தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினரும் பொலிஸாரும் ஒன்றாகவே செயற்பட்டனர்" - என்றார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரான் ஹாசீம் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கினார் என்றும் அஸாத் ஸாலி தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://puthusudar.lk/2019/06/12/gotabaya-zahran/

கருத்துகள் இல்லை: