சனி, 15 ஜூன், 2019

தினகரன் முக்கிய முடிவு .. கட்சியை தொடர்ந்து நடத்துவதா அல்லது .....?

தினமலர் :லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின், கட்சியை தொடர்ந்து
நடத்துவதா அல்லது கலைத்து விட்டு, தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில் இணைவதா என்பது குறித்து, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன், சென்னையில், இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், 45 லட்சம் ஓட்டுகளை எதிர்பார்த்த, அ.ம.மு.க.,விற்கு, 22 லட்சம் ஓட்டுகள் தான் கிடைத்தன. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, தினகரன் சந்தித்தார்.அப்போது, சசிகலா கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு பதிலாக, சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால், ஆட்சி மாற்றத்திற்கு, நாம் காரணமாக இருந்திருப்போம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்,ஏ.,க்களை மட்டும் தான், மீண்டும் தேர்தலில் நிறுத்தியிருக்க வேண்டும். தங்கதமிழ்செல்வன், பழனியப்பன் போன்றவர்களை, எம்.எல்.ஏ., தேர்தலில் தான் நிறுத்தியிருக்க வேண்டும். பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லாமல், எதற்காக, நாற்பது தொகுதிகளில் வீண் செலவு செய்தீர்கள்.இவ்வாறு, சசிகலா கேட்டுள்ளார்.

இதற்கிடையில், அ.ம.மு.க., நிர்வாகிகள் பாப்புலர் முத்தையா, இன்பத்தமிழன் போன்றவர்கள், மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதனால், அதிருப்தி அடைந்த தினகரன், புதுச்சேரியில் உள்ள, தன் பண்ணை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார்.உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை சொகுதிகளும் காலியாகி உள்ளன. இதனால், இந்த இரண்டு தேர்தலிலும் போட்டியிடுதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க, தினகரன் விரும்பினார்.
தனக்கு நெருக்கமானவர்களிடம் தினகரன், 'உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம்' என கூறியுள்ளார். தொடர்ந்து, கட்சியை நடத்துவதா அல்லது அ.தி.மு.க.,வில் இணைவதா என்பது குறித்து விவாதிக்கவும், அவர் திட்டமிட்டுள்ளார்.அதற்காக, சென்னை, அடையாறில் உள்ள, தன் வீட்டில், இன்று, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களை அழைத்து, தினகரன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: