ஞாயிறு, 5 மே, 2019

தற்கொலையைத் தடுத்திருக்கலாம்: போலீஸ் மீது புகார்!

தற்கொலையைத் தடுத்திருக்கலாம்: போலீஸ் மீது புகார்!மின்னம்பலம் : புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு பெண்ணின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கிருஷ்ணகிரி போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகள் அபிநயா (27) எம்.எஸ்ஸி படித்துள்ளார். கல்லூரியில் படித்தபோது, இவருக்கும் பாலன் என்ற நபருக்கும் ஃபேஸ்புக் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலன் (30). இவரது குடும்பம் அப்பகுதியில் வசதி படைத்தது என்று கூறப்படுகிறது.

நாளடைவில் இருவருக்கும் இடையிலான ஃபேஸ்புக் நட்பு காதலாக மாறியது. கல்லூரிப் படிப்புக்குப் பின்னர், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார் அபிநயா. கோவையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் பாலன். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பாக சேலம் வந்த அபிநயா பாலனைச் சந்தித்தார். மூன்று நாட்கள் இருவரும் விடுதி ஒன்றில் தங்கினர். அதன் பின்னர் அபிநயாவைத் திருமணம் செய்துகொள்ள பாலன் மறுத்துவிட்டார். இதையடுத்து, கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் பாலன் மீது புகார் அளிக்க முயன்றார் அபிநயா. ஆனால், அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் பொள்ளாச்சியில் இருப்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திலும் பாலன் மீது அபிநயா புகார் கொடுத்துள்ளார். ஆனால், அங்கேயும் அதை வாங்க மறுத்தனர் போலீசார். “நீங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது, விடுதியில் அறை எடுத்துத் தங்கியது எல்லாமே சேலத்தில்தான் நடந்துள்ளது. அதனால் அங்கே போய் புகார் கொடு” என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதன் பிறகு கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி என பலமுறை அலைந்தும், அபிநயாவின் புகார் ஏற்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அபிநயா, கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 27) தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினார் கிருஷ்ணகிரி டவுன் ஆய்வாளர் பாஸ்கர். அது தொடர்பாக விசாரணை நடத்தி, பாலன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 471 (நம்பிக்கை மோசடி செய்தல்), 506 (2) (கொலை மிரட்டல்), 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து, நேற்று முன்தினம் (மே 3) பாலன் கைது செய்யப்பட்டார்.
அபிநயாவின் தற்கொலை குறித்து, அவருடைய தந்தை தங்கமணியிடம் பேசினோம். “ஓசூர் அதியமான் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலிருந்தே ஃபேஸ்புக் மூலம் இருவரும் பழகி வந்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த விவகாரம் எனக்குத் தெரியும். என்னுடைய மனைவியின் கண் அறுவை சிகிச்சைக்காகக் கோவைக்குச் சென்றிருந்த நேரத்தில், அந்தப் பையன் பாலனும் வந்திருந்தார்.

என்னைப் பார்த்துப் பேசினார். “எங்க வீட்டுக்குக் காதல் விவகாரம் எல்லாம் தெரியாது. என்னுடைய பெற்றோர்களிடம் பேசி, அவர்களைச் சமாதானம் செய்துவிட்டு நான் உங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சொன்னார். “வேண்டாம் தம்பி! நீங்க கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவங்க. நாங்க போயர் சமூகத்தைச் சேர்ந்தவங்க. எங்கிட்டே பெரிய அளவுக்கு வசதியில்லை. என் பொண்ணுக்கு இருபது பவுன் நகை மட்டும் தான் போடமுடியும்” என்று சொன்னேன்.
“எனக்கு நகையெல்லாம் தேவையில்லை, உங்க பொண்ணுதான் வேணும். ஆறு மாசம் பொறுத்துக்குங்க, அதுக்குள்ளே நான் பேசி முடிக்கிறேன்” என்று சொன்னார். நாங்களும் நம்பினோம். ஆறு மாதம், மூன்று மாதம் என இழுத்துக்கொண்டே போனது. “இனிமேலும், அந்தப் பையனை நம்பிக் காத்திருக்க வேண்டாம். நமக்குத் தெரிஞ்ச இடத்தில் வேற மாப்பிள்ளை பார்க்கலாம்” என்று பொண்ணுகிட்டே சொன்னேன்.
“ஆனால், என்னாலே பாலனை மறக்க முடியாது” என்று சொன்னவள் நேரா துணிமணிகளை எடுத்துக்கிட்டு கிளம்பி சேலம் போயிட்டா. அப்போ பொள்ளாச்சியிலிருந்து சேலம் வந்திருக்கான் அந்தப் பையன். ரெண்டு பேரும் ஹோட்டல்லே ரூம் போட்டு மூணு நாள் தங்கியிருந்திருக்காங்க. கடைசியில, ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய என்னுடைய சர்டிபிகேட் எல்லாம் எடுத்திட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொள்ளாச்சிக்குப் போயிட்டான். அதுக்குப் பிறகு எங்க பொண்ணு திரும்பவும் வீட்டுக்கு வரப் பயந்துக்கிட்டு, எங்க ஃப்ரெண்டு ஒருத்தர் வீட்டுக்குப் போயிட்டா. தகவல் தெரிஞ்சு நான்தான் போயி சமாதானம் செஞ்சு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்.
அதுக்குப் பிறகுதான், எங்களை ஏமாற்றுன பாலனைச் சும்மா விடக்கூடாதென்று கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையம் போனோம். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் அமுதவல்லி, ரொம்பவும் அசிங்கமா பேசினாங்க. ஒரு பொண்ணு முன்னாலே அப்பாகிட்டே பேசக்கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசினாங்க.
அதுக்குப் பிறகு எங்க சொந்தக்காரங்க 20 பேரோட பொள்ளாச்சிக்குப் போனோம். பஸ் ஸ்டாண்டுக்கு பின்பக்கம் ஆர்.கே.வி தெருவில் இருந்த பாலன் வீட்டுக்கும் சென்று நியாயம் கேட்டோம். அவங்க மாமா சந்திரசேகர்னு ஒருத்தர் அவனையும் கூட்டிக்கிட்டு வந்து பேசினார். பேசிக்கிட்டு இருக்கும்போதே வேகமா ஓடினவன், அங்கிருந்த காரை எடுத்துகிட்டு தப்பிப் போய்விட்டான்.
பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்துக்கும் போனோம், புகார் கொடுத்தோம். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ‘நீங்க கிருஷ்ணகிரி எஸ்பியை பாருங்க அங்கேதான் நடவடிக்கை எடுக்கமுடியும்’னு சொல்லிட்டாங்க. எங்க சொந்தக்கார வக்கீல் ஒருவர் மூலமாக கிருஷ்ணகிரி எஸ்பி பண்டிட் கங்காதர்கிட்டே புகார் கொடுத்தோம். அதைத் திரும்பவும் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்துக்கே அனுப்பினார்.
திரும்பவும் அமுதவல்லி அம்மாகிட்டேயே போனோம். என்னையும் எம் பொண்ணையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிட்டாங்க. அதுக்குப் பிறகு தான், தனக்கு வாழ வழியே இல்லை என்ற முடிவில் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள். இன்ஸ்பெக்டர் அமுதவல்லி அம்மா என் பொண்ணு குடுத்த புகார் மேல் நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தாலும் பரவாயில்லை. நல்லபடியா நாலு வார்த்தை அந்தப் பொண்ணுகிட்டே ஆறுதலா பேசியிருந்தால் கூட என் பொண்ணு தற்கொலை செஞ்சிருக்க மாட்டா. சட்டப்படி என் மகள் சாவுக்குக் காரணமாக இருந்த அந்த அம்மா மேலேயும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் உக்கிரமாக.

கருத்துகள் இல்லை: