திங்கள், 6 மே, 2019

உயர்ஜாதியினர் முன்பு அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை


மிரட்டுகிறார்கள்
போராட்டம் tamiloneindia :உயர்ஜாதியினர் முன்பு அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் அடித்துக் கொலை டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர்ஜாதியினர் முன்பு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டம் நைன்பக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர தாஸ். 23 வயது தலித் இளைஞரான இவர், தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி பங்கேற்றார்.
அப்போது உயர்ஜாதியினர் அமர்ந்து உணவு சாப்பிடும் வரிசையில் ஜிதேந்திர தாஸ் உணவு சாப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த உயர் ஜாதி இளைஞர்கள் அவரை அந்த இடத்திலேயே கொடூரமாக அடித்த உதைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஜிதேந்திர தாஸ் உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ மகத் இந்ரேஸ் என்ற மாவட்ட மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 28ம் தேதி அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜிதேந்திர தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.




போராட்டம்

இதையடுத்து ஆவேசம் அடைந்த ஜிதேந்திர தாஸின் உறவினர்கள் பிரேத பரிசோதனை அறை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்த நிலையில் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.



மிரட்டுகிறார்கள்

இந்த விவகாரம் உத்தரகாண்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த ஜிதேந்திர சிங்கின் சகோதரி பூஜா, எனது சகோதரனை, உயர் ஜாதியினர், எங்களுடன் சரிக்கு சமமாக உட்கார்ந்து சாப்பிடுவாயா என்று சொல்லி சொல்லி கொடூரமாக தாக்கினார்கள். என் வீட்டில் அவன் தான் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி வந்தான். இப்போது அவனை நாங்கள இழந்துவிட்டோம். எங்களிடம் புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டுகிறார்கள்.புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உத்தரகாண்ட் முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.



போலீஸ்மீது புகார்

நைன்பக் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களில் ஒருவரான சந்தீப் கண்ணா அந்த பெண்ணின் உறவனர்கனை டேராடூனில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். அவர் இந்த கொலை குறித்து கூறுகையில், போலீசார் இந்த வழக்கில் எப்ஐஆர் போட்டதோடு சரி, யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. எஸ்சிஎஸ்டி தடுப்புச்சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஏராளமான போலீசார் எங்களின் போராட்டத்தை தடுக்கிறார்கள். ஆனால் எந்த போலீசும் ஒரு குற்றவாளியை கூட கைது செய்யவில்லை என்றார்.



போலீஸ் மறுப்பு

முன்னதாக இதே பகுதியில் சாராயம் கொடுக்க மறுத்த தலித் இளைஞர் ஒருவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயர்ஜாதியினர் அடித்துக்கொலை செய்ததாகவும், அந்த குற்றவாளியை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனிடையே ஜிதேந்தர் தாஸ் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் மீது எஸ்சி எஸ்டி தடுப்பு சட்டத்தில வழக்கு பதிவு செய்திருப்பதாக நரேந்தர் நகர் காவல் அதிகாரி உத்தம் சிங் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: