செவ்வாய், 7 மே, 2019

லாட்டரி மார்ட்டின் வீட்டில் ரூ.98,000 மட்டுமே கைப்பற்றப்பட்டதாம்

மார்ட்டின் வீட்டில் ரூ.98,000 மட்டுமே கைப்பற்றப்பட்டதா?மின்னம்பலம் : 98,000 ரூபாய் மட்டுமே எங்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது என்று கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.
கோவையைச்  சேர்ந்த லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மார்ட்டின் வீடு, தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்கள் உட்பட 70 இடங்களில் வருமான வரித் துறையினர் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.600 கோடிக்கும் மேல் செய்யப்பட்ட முதலீடுகளுக்கான மூல ஆதாரம் இல்லை என்பதும், லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த ரூ.592 கோடிக்கான வருவாய்க்கு வரி செலுத்தாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் கூறினர். அதுமட்டுமின்றி கோவையில் மார்ட்டினின் வீட்டில் உள்ள ரகசிய அறையில் ரூ.8.25 கோடி கணக்கில் வராத பணம் பிடிபட்டதாகவும், அதில் ரூ.5 கோடிக்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினர்.
மார்ட்டின் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்கள் வீட்டிலிருந்து ரூ.98,820 மட்டுமே கைப்பற்றப்பட்டதற்கான ஆவணம் கொடுக்கப்பட்டுள்ளதாக மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (மே 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.04.2019 அன்று கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள எங்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது நான், எனது இளைய மகன் டைசன் மற்றும் சில ஊழியர்கள் வீட்டில் இருந்தோம்.
சோதனையின் முடிவில் எங்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தொகையின் மதிப்பு ரூ.98,820 ஆகும். அதற்கான சட்டப்பூர்வமான கைப்பற்றுதல் படிவமானது வருமான வரித் துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிடப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க கடந்த 2 நாட்களாகக் கோவையில் உள்ள எங்களது வீட்டில் கட்டிலுக்கு அடியிலும் மற்றும் பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டதாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த காணொளிகளின் புகைப்படங்கள் சில செய்தித்தாள்களிலும் வெளியாகியுள்ளது. அந்தக் காணொளியில் உள்ளவாறு எந்தவொரு நிகழ்வும் எங்கள் வீட்டில் நடைபெறவில்லை. அதில் காண்பிக்கப்பட்டவாறு எந்தவொரு அறையோ, கட்டிலோ மற்றும் படிக்கட்டுகளோ எங்கள் வீட்டில் இல்லை. அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அந்த காணொளிக்கும், எங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் அங்குக் கைப்பற்றிய 98,820 ரூபாய்க்கான கைப்பற்றுதல் படிவத்தையும் (PANCHNAMA) இந்த அறிக்கையுடன் அவர் இணைத்துள்ளார்.
மேலும், “சிபிஐ, என்.ஐ.ஏ சோதனை நடத்தினால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடுகிறார்கள். மத்திய அரசின் வருமான வரித்துறையும் கடந்த காலங்களில் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தது. ஆனால் சோதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கை அளிப்பதை இப்போது வருமான வரித் துறை நிறுத்திவிட்டது. அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஊடகங்களில் வீடியோக்களை வருமான வரித்துறை கசிய விடுகிறது. ஊடகங்களுக்கு கசியவிடும் காட்சிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை” என்றும் லீமா ரோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மர்மமான முறையில் மே 3ஆம் தேதி உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி சாந்தாமணி, தங்கள் குடும்பத்தினருக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்தான் காரணம் என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார். வருமான வரித் துறையைச் சேர்ந்த ராஜன் மற்றும் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஜான் என்பவரைக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பழனிசாமியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது<

கருத்துகள் இல்லை: