வியாழன், 9 மே, 2019

ஸ்டாலின் விகடன் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

Mahalaxmi : ஜூனியர் விகடனில் வெளியான தேர்தல் நிதி, சிக்கிய மார்ட்டின், சிக்கலில் திமுக என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானது மு.க.ஸ்டாலின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வெளியான கட்டுரைக்கு விகடன் குழுமம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என நோட்டீஸ்

இதுதான் அந்த பதிவு : 
விகடன் :500 கோடி தேர்தல் நிதி? - சிக்கிய மார்ட்டின்... சிக்கலில் தி.மு.க!
மார்ட்டின் சாம்ராஜ்ஜியத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. சி.பி.ஐ விசாரணை... ஐ.டி. ரெய்டு... வழக்குகள்... கைது... இவை எதுவுமே மார்ட்டினுக்குப் புதிதல்ல. இந்தச் சோதனையின் அடுத்த அத்தியாயம்தான் இப்போது நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு. மார்ட்டினுக்கு நெருக்கமான பழனிச்சாமியின் மர்ம மரணம், தேர்தல் நிதிக்குப் பண உதவி என இப்போதைய ரெய்டின் பின்னணியில் பல்வேறு பரபரப்பு செய்திகள் படபடக்கின்றன.
சான்டியானோ மார்ட்டின் என்பதுதான் அவரது பெயர்... ஆனாலும் ‘லாட்டரி மார்ட்டின்’ என்றால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும்! கோவையைச் சேர்ந்த மார்ட்டின், லாட்டரி தொழிலில் இந்தியா முழுவதும் கால் பதித்தவர். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. தமிழகத்தில் லாட்டரியைத் தடை செய்தாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வருபவர். ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்ட் கோ பாதம் பதிக்காத தொழில் இல்லை. இதனாலேயே அரசியல் தொடர்புகளும் அதிகம்.

எல்லாக் கட்சிகளுக்கும் நிதி வழங்கி, பொது மனிதராக இருந்த மார்ட்டின் 2006–2011 தி.மு.க ஆட்சியின்போது, கருணாநிதி குடும்பத்துடன் கூடுதல் நெருக்கம் காட்டினார். விளைவு, 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் கோபம் மார்ட்டின் மீது பாய்ந்தது. ரெய்டுகள், வழக்குகள், கைது எனத் திண்டாடினார் மார்ட்டின். இப்போதும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் அவருக்கு நட்புள்ளதாகத் தகவல் உண்டு. பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ். மார்ட்டினின் ஒரு மகன் சார்லஸ், பி.ஜே.பி-யிலும் மற்றொரு மகன் டைசன், தமிழர் விடியல் கட்சியிலும் இருக்கின்றனர். மார்ட்டின் குடும்பத்துக்கு சி.பி.ஐ ரெய்டு, ஐ.டி ரெய்டு எதுவும் புதிதோ, அச்சத்துக்குரியதோ இல்லை. ஆனால், இப்போது நடைபெற்றுள்ள ஐ.டி ரெய்டின் தொடர்ச்சியாக அவரது நிறுவன ஊழியர் ஒருவர் மர்ம மரணம் அடைந்திருப்பது, மார்ட்டின் குடும்பத்தை நடுநடுங்க வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி, மார்ட்டினின் தொழில் தொடர்புடைய 70 இடங்களில் ஐ.டி ரெய்டு தொடங்கியது. கொல்கத்தா விமான நிலையத்திலிருந்த மார்ட்டினிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். மார்ட்டினின் ஊழியர்களும் விசாரிக்கப்பட்டனர். ‘சாதாரண ரெய்டாகத்தான் இருக்கும்’ என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த பழனிச்சாமியின் திடீர் மர்ம மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரமடை அருகே உருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்து வந்தார். வருமானவரித் துறை அதிகாரிகள் பழனிச்சாமியிடம் தொடர்ந்து மூன்று நாள்கள் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், வெள்ளியங்காடு குட்டையில் இருந்து மே 3-ம் தேதி பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார் பழனிச்சாமி.

என்னதான் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகப் பழனிச்சாமியின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றோம். அவருடைய மகன் ரோகின் குமார் நம்மிடம் பேசினார். “செவ்வாய்க் கிழமையிலிருந்து  எங்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைத்து, அப்பாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் அப்பாவைக் கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து விசாரணை நடத்தினார். அவருக்கு உணவுகூட கொடுக்கவில்லை. பிறகு அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். உடலில் தடிப்பு காயங்கள் இருந்தன. கழுத்தை நசுக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் அப்பாதான் என்னிடம் சொன்னார். 2-ம் தேதி இரவுதான் வீட்டுக்கு வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 3-ம் தேதி குளிக்காமல், உடைகூட மாற்றாமல் ஆபீஸ் போவதாகக் கிளம்பிச்சென்றார். ஆனால், அவர் அங்கே போகவில்லை என்று பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. போலீஸில் புகார் அளித்தோம். வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர்தான் அவர் உயிரிழந்ததற்கு முக்கியக் காரணம். அப்பாவுடன் வேலை பார்க்கும் மூன்று பேர் மீதும் எங்க ளுக்குச் சந்தேகமிருக்கிறது. அவர்கள் அப்பாவை ஏதோவொரு விஷயத்தில் சிக்கவிட்டிருக்கிறார்கள்’’ என்றார்.
ரோகின்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வருமானவரித் துறை அதிகாரிகள் மீது காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதித்துறை நடுவரைக் கொண்டு, அவரது வழிகாட்டுதலின்படி, தன் தந்தைக்கு உடற்கூராய்வு செய்ய வேண்டும், அதை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு ரோகின் குமார் மனு கொடுத்துள்ளார்.

வருமானவரித் துறையின ரிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டபோது, “பழனிச்சாமி யிடம் 2-ம் தேதியே விசாரணை முடிந்துவிட்டது. 3-ம் தேதி நாங்கள் பழனிச்சாமியை விசாரிக்கவேயில்லை. அவர் 2-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கூட கையில் கட்டுடன்தான் வந்திருந்தார். பணப் பரிமாற்றம் தொடர்பாகப் பழனிச்சாமி பல தகவல்களைக் கூறியுள்ளார். பழனிச்சாமியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங் களும், மார்ட்டினிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும் ஒன்றிப் போகின்றன. தேவைப்பட்டால், பழனிச்சாமியிடம் நடத்திய விசாரணையை, கோவை போலீஸா ருக்கு அறிக்கையாகக் கொடுப்போம்” என்று சொன்னார்கள். வருமான வரித்துறை சொல்லியுள்ள விளக்கத்தின் படி, பழனிச்சாமியிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. மேலும், 2-ம் தேதி இரவு பழனிச்சாமியை யாரோ செல்போனில் அழைத்து மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘அந்த நபர் யார்? என்ன பேசினார்’ என்பதைக் கண்டு பிடித்தாலே பழனிச்சாமி யின் மரணத்துக்கான காரணம் தெரிந்துவிடும். 3-ம் தேதி இரவு மார்ட்டினின் ஆள்கள், பழனிச்சாமியின் குடும்பத்தை நேரில் சந்தித்தும் பேசியுள்ளனர். குறிப்பாக, பழனிச்சாமி உயிரிழந்த குட்டையில் நீர் குறைவாகத்தான் இருக்கிறது. அதில், அவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு குறைவே. எனவே, அவரை யாராவது கொலைசெய்து, குட்டையில் போட்டார் களா... என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ரெய்டுக்கான காரணம் குறித்து மார்ட்டினின் வியாபார தொடர்பு களை நன்கறிந்த வட்டாரங்களில் விசாரித்தபோது, “தி.மு.க-வின் முக்கிய ‘இன்கம் சோர்ஸ்’ஆக மார்ட்டின் இருக்கிறார். இதனால், ஸ்டாலினும் மார்ட்டின் மீது தனிப் பாசம் காட்டி வருகிறார்.  மார்ட்டின் மகள் டெய்சி திருமணத்தின்போதும், கடந்த ஆண்டு மார்ட்டினின் தந்தை சந்தியாகு உடையார் இறந்தபோதும் ஸ்டாலின் வந்திருந்தார். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக, மார்ட்டினிட மிருந்து பெரும் தொகை தி.மு.க-வுக்குச் சென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் தொடர்பான உளவுத்துறை அறிக்கையால் அ.தி.மு.க-வினர் ஏற்கெனவே கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், மார்ட்டினை தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி கட்சியினர் காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால், மார்ட்டினிடம் இருந்து அவர்கள் எதிர்பார்க்கும் பதில் வரவில்லை. தற்போது சூலூர் இடைத் தேர்தலுக்காகவும் மார்ட்டின் பெரிய அளவு உதவி செய்வதாகத் தகவல் சென்றுள்ளது.

மார்ட்டின் குடும்பத்தில் சிலரே, அவர் தி.மு.க-வுடன் நெருக்கமாக இருப்பதை விரும்பவில்லை. இதனால், சமீபகாலமாக மார்ட்டின் குடும்பத்தினர் சிலரே அ.தி.மு.க-வுடன் நெருக்கம் காட்டியிருக்கின்றனர். கடந்த ஆண்டு கஜா புயல் நிவாரண நிதியை, மனைவி லீமா ரோஸ் மற்றும் மகன் சார்லஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கினார்கள். மேலும், தேர்தல் நிதியாக அ.தி.மு.க-வுக்கும் ஒரு பெரிய தொகை இவர்களிடம் இருந்து சென்றுள்ளது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, தி.மு.க தரப்புக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை நிதியாக மார்ட்டின் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். அதேபோல மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பல நூறு கோடிகள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் செக் வைக்கவே மார்ட்டின் மீது ரெய்டு நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தி.மு.க-வுக்கு எதிரான உறுதியான பல தகவல்களை மார்ட்டின் தரப்பிலிருந்து கறந்திருக்கும் வருமானவரித்துறை, அதையெல்லாம் மேலிடத்துக்கு சமர்ப்பித்துள்ளது. இந்த விவரங்கள் எல்லாம், தி.மு.க-வுக்கு சிக்கலை உருவாக்கக்கூடும். அதேசமயம், இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மார்ட்டினே அ.தி.மு.க பக்கம் தாவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’  என்கிறார்கள்.

வருமானவரித் துறை இப்போது நடத்திய ரெய்டில், லாட்டரி டிக்கெட்டில் வந்த (கணக்கில் வராத) ரூ.595 கோடி, பல்வேறு முதலீடுகளில் உள்ள (கணக்கில் வராத) ரூ.619 கோடி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.5.8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.24.57 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வருமானவரித் துறை சோதனை, பழனிச்சாமி மரணம் தொடர்பாக விளக்கம் கேட்க மார்ட்டின் வீட்டுக்கு நேரடியாகச் சென்றும் வீட்டிலுள்ள நபர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. அவரது மனைவி லீமா ரோஸ், அவரது உதவியாளர் ஸ்டெல்லா ஆகியோரையும் தொடர்பு கொண்டோம். நம் அழைப்பு ஏற்கப்படவில்லை.
மர்மங்களின் மறுபெயர்தானோ மார்ட்டின்?

 - இரா.குருபிரசாத்
 படங்கள் தி.விஜய்


‘‘பாதாள அறை எல்லாம் இல்லை’’

மா
ர்ட்டின் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக், “பழனிச்சாமியின் மரணத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. பழனிச்சாமியின் குடும்பத்தினர் மாறுபட்ட தகவல்களைக் கூறி வருகின்றனர். அவரது மகன் ரோகின் குமார், ‘மார்ட்டின் தரப்பினர் மீது சந்தேகம் இல்லை’ என்று கூறுகின்றார். ஆனால், அவரது தாய் மார்ட்டின் மற்றும் லீமா ரோஸ் மீது குற்றம் சாட்டுகிறார். இதுதொடர்பான முழு விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம். மார்ட்டின் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் எடுக்கப்பட்டதாகப் போட்டோ மற்றும் வீடியோ பரவி வருகிறது. அது போலியானது. மார்ட்டின் வீட்டில் பாதாள அறை எல்லாம் இல்லை. கட்டிலுக்கு அடியில் பணமும் இல்லை. வருமானவரித் துறையினர் மொத்தமாகவே ரூ.98 ஆயிரத்து 820 தான் பறிமுதல் செய்தனர். அதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது” என்றார்.

 
‘‘லீமா ரோஸ்தான் பொறுப்பு’’

‘‘ப
ழனிச்சாமியின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்’’ என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  “என் கணவர் பழனிச்சாமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை உடலை வாங்க மாட்டோம். அவர் தற்கொலை செய்யவில்லை. அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் ரத்தக் காயங்கள் உள்ளன. எங்கள் முன்பே வருமானவரித் துறை அதிகாரிகள் என் கணவரை அடித்தனர். என் கணவர் மரணத்துக்கு வருமானவரித் துறை அதிகாரிகளும், மார்ட்டின் கம்பெனியுமே காரணம். மார்ட்டின் கம்பெனியினர் அவரை அடித்துக் கொன்று குட்டையில் போட்டுள்ளனர். எனக்கோ, எனது மகன்களுக்கோ ஏதேனும் நடந்தால், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ்தான் பொறுப்பு. என் கணவரை அடித்த அதிகாரியை என்னால் அடையாளம் காட்ட முடியும். தங்கள் தவற்றை மறைப்பதற்காக, மார்ட்டின் ஆட்கள் எங்களது பகுதியில் வீடு வீடாகச் சென்று, தங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி கையெழுத்து கேட்டு வருகின்றனர். போலீஸார் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைக் கொடுத்து, சடலத்தை ஒப்படைத்து சமாதானம் செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு சில அரசியல் கட்சிகளும் துணை நிற்கின்றன. எங்களின் சாதி பெயரைச் சொல்லி காவல்துறை, வருமானவரித் துறையினர் திட்டுகின்றனர். என் கணவர் நியாயமானவர். எனவே, குற்றவாளிகள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இனி ஒரு உயிர் மார்ட்டின் நிறுவனத்தில் போகக்கூடாது. எனவே, அந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்க வேண்டும்” என்று பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி சீறுகிறார்.

ஸ்டாலின்... மம்தா...  கொல்கத்தா... ஸ்கெட்ச்!

மி
யான்மரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த மார்ட்டின், 1988-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி விற்பனையைத் தொடங்கினார். இன்றைக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் பிசினஸ் மேனாக ஆகிவிட்டார். சிக்கிம், அருணாசல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் லாட்டரி விற்பனையை விரிவுபடுத்தினார். பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் அரசாங்கத்துடன் பேசி அங்கேயெல்லாம் லாட்டரி டிக்கெட் விற்க அனுமதி வாங்கினார். ஹவாலா முறையில் பணம் கைமாறுவதாக சி.பி.ஐ-க்குப் புகார்கள் சென்றன. 2011-ல் 4,500 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கிம் அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டதாக சி.பி.ஐ தரப்பில் 32 வழக்குகள் போடப்பட்டன. கேரளத்திலும் அரசுக்குப் பணம் கட்டியதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. கேரளாவில் சி.பி.ஐ-யிடம் சிக்கிய பலர், ‘‘நாங்கள் எங்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற சிக்கிம் மாநில லாட்டரி தரப்பினரை அணுகினோம். லாட்டரி வின்னர் என்கிற போர்வையில் பணத்தை மாற்றினோம்’’ என்று சொன்னார்கள். மார்ட்டினின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில் இயங்கியது. 2015-ம் வருடம் மார்ட்டினுக்குத் தொடர்புடைய ஒன்பது இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சாக்கு மூட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கட்டப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு நூறு கோடிக்கும் மேல். இது தொடர்பாக மார்ட்டினின் வலது, இடது கரங்களான அலெக்ஸாண்டர், நாகராஜன் ஆகிய இருவரையும் பிடித்தனர். இந்த இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போய் வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கொல்கத்தாவில் பிடிபட்ட பணம் துபாய்க்கு ஹவாலா முறையில் கொண்டு செல்ல இருந்ததாகத் தெரியவந்தது. இதுபற்றி 4.10.15 தேதியிட்ட ஜூ.வி இதழில் விரிவாக எழுதியிருக்கிறோம்.
மார்ட்டினுடன் போட்டியில் இருந்த லாட்டரி அதிபர்கள் தான் இந்த முறை மார்ட்டினைப் பற்றி வருமானவரித் துறைக்குப் போட்டுக்கொடுத்தார்களா... என்று சிலரிடம் கேட்டோம். ‘‘லாட்டரி விற்பனை வெளிப்படையாக நடக்கும் மாநிலங்களில் அழுத்தம் கொடுத்து அங்கே தடை கொண்டுவர ஏற்பாடு செய்வார் மார்ட்டின். தடை இருக்கிற மாநிலங்களில்தான் தடபுடலாக தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்துவார் மார்ட்டின். சகல தரப்பினருக்கும் மாமூல் கொடுத்து ரூட் கிளியர் செய்வார். இந்த வகையில், வட நாட்டைச் சேர்ந்த மார்வாடிகள் சிலர் வெளிப்படையாக லாட்டரி விற்கமுடியாமல் போனது. அவர்கள் ஒரு சிண்டிகேட் போட்டு மார்ட்டினைப் பற்றித் தகவல் சேகரித்து வந்தார்கள். தமிழகத்தில் ஏற்கெனவே லாட்டரி ‘டாண்’களாக செயல்பட்டு வந்தவர்கள் தற்போது மார்ட்டினிடம் சரண்டர் ஆகிவிட்டார்கள். அவர்கள் பிசினஸ் செய்து சம்பாதிப்பதைவிடவும் அதிகமான தொகையை மாமூலாகவே அவர்களுக்குக் கொடுத்து வருகிறார் மார்ட்டின். அதுவே அவர்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆன்லைன் லாட்டரி என்கிற பெயரில் தனி லாட்டரி அரசாங்கமே நடக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த விஷயம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல் கட்சிகளுக்குக் கட்சி நிதி தருவதிலும் தாராளமான குணமுடையவர் மார்ட்டின். கேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகைக்கு நிதி தந்த விவகாரம் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, மத்தியில் ஆளும் பி.ஜே.பி பிரமுகர்களை மார்ட்டின் கவனித்ததாகத் தகவல் உண்டு. அதேநேரம், பி.ஜே.பி-க்கு எதிராக அணி திரண்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கும் நிதி ஆலோசகராகவே மார்ட்டின் செயல்படுவதாக பி.ஜே.பி அரசுக்குத் தகவல் போனது. மம்தாவும், ஸ்டாலினும் கொல்கத்தாவில் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைப் பின்னணியில் செய்து கொடுத்தவர் மார்ட்டின்தான் என்று தகவல் போனதாம். இவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டும்படி மத்திய உளவுத்துறைக்கு உத்தரவு போனது. தமிழகம், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் கிடைத்த உறுதியான தகவல்களை வைத்துத்தான் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்த ஸ்கெட்ச் போடப்பட்டது.’’ என்கிறார்கள்.

- கனிஷ்கா


‘‘மார்ட்டின் வேதனையடைந்தார்’’

மா
ர்ட்டின் மனைவி லீமா ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பழனிச்சாமியின் மரணம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் எங்களுக்குப் பேரிழப்பு. வருமானவரித் துறையினர் கொடுத்த மன உளைச்சலில்தான் பழனிச்சாமி உயிரிழந்ததாக காரமடை போலீஸார் பதிவுசெய்துள்ள எஃப்.ஐ.ஆர் மூலமாக தெரியவந்துள்ளது.  மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி பழனிச்சாமியின் மரணத்துக்கான காரணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். உடல்நலக் குறைபாடு காரணமாக மார்ட்டின் கொல்கத்தா தனியார் மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வருகிறார். பழனிச்சாமியின் மரண செய்தி கேட்டு மார்ட்டினும் வேதனையடைந்தார். பழனிச்சாமி குடும்பத்துக்கு உறுதுணையோடும், ஒத்துழைப்போடும் இருப்போம். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: