வியாழன், 23 மே, 2019

அமரர் ஆர் டி சீத்தாபதி.. திமுகவின் கோட்டையாக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் ....

Sivasankaran.Saravanan : திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதுபெரும்
தொண்டர்களில் ஒருவரான ஆர் டி சீத்தாபதி அவர்களது மறைவுச்செய்தி நேற்றைய தினம் வந்தது. அதே பகுதியில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது அவரது வீட்டை கடந்து போவேன். இருந்தபோதிலும் அவர் எத்தகைய செல்வாக்கு பெற்ற நபர் என்பதை நான் நேற்றுவரை அறியவில்லை. ஒரு செல்வாக்குள்ள அரசியல்வாதிக்கான எந்த டாம்பீகத்தையும் அந்த வீட்டில் நான் கண்டதில்லை என்பது அதற்கு காரணமாக இருக்கும்.
மரணச்செய்தி கேள்விப்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் தளபதி ஸ்டாலின் அந்த வீட்டுக்கு வருகை தருகிறார். திமுக முக்கிய பிரமுகர்கள் இரவு முழுவதும் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். இன்றைய தினம் திரும்பவும் வந்த ஸ்டாலின் அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று கலந்துகொள்கிறார் . இதையெல்லாம் பார்த்த பிறகு தான் அவரது உயரம் எனக்கு தெரியத்தொடங்கியது.

ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் திமுக செயலாளராக இருந்த RDS அவர்கள் தேர்தல் களப்பணியில் தலைவர் கலைஞரின் பாராட்டுகளை பலமுறை பெற்றிருக்கிறார். கலைஞர் , பேராசிரியர் , ஆற்காடு வீராசாமி , நாஞ்சில் மனோகரன் போன்ற கழக முன்னோடிகள் பலரது வெற்றியை சென்னையில் உறுதி செய்தவர் ஆர்டிஎஸ். சென்னை - திமுகவின் கோட்டை என்ற பெருமைக்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். எமர்ஜன்சி ஆட்சிக்கலைப்புக்கு பின்னர் நடைபெற்ற 1977 தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் அதிக இடங்களில் திமுக தோல்வியைத்தழுவிய போது கூட , சென்னை மாவட்டத்தில் 14 தொகுதிகளில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றியது என்ற மகத்தான சாதனையை செய்திருக்கிறார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததை கண்டபோது திமுக ஒரு குடும்பக்கட்சி என்பது மேலும் உறுதிப்பட்டது..!

கருத்துகள் இல்லை: