வெள்ளி, 24 மே, 2019

கேரளாவில் வரலாறு படைத்த காங்கிரஸ்! - தென் இந்தியாவில் ராகுல் காந்தி வென்ற கதை

கேரளாவில் ராகுல்vikatan.com - -sathya-gopalan : நடந்துமுடிந்துள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைபற்றி, தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில், ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 90 இடங்கள் வரை  கைப்பற்றியுள்ளது. அதேபோல, மற்ற கட்சிகள்100 இடங்கள் வரை கைப்பற்றியுள்ளன.
இந்தத் தேர்தல், ராகுலுக்கு சற்று சோகமான தேர்தல் என்றே கூற வேண்டும். காங்கிரஸின் கோட்டையான உத்தரப்பிரதேசம் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்னதாக இரண்டு முறை அமேதி மக்களவை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார். 
ஆனால் அதேவேளை, வயநாட்டில் மாபெரும் வெற்றிபெற்று வரலாறு படைத்துவிட்டார். சுமார் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அங்குள்ள 20 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
கேரளாவில் ராகுல் காந்தி மூன்று நாள்கள் மட்டுமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ஆனால், அந்த மூன்று நாள்களில் கேரள மக்களை தன் பக்கம் சாய்க்கும் அனைத்து வேலைகளையும் கண கச்சிதமாகச் செய்து முடித்தார். சிறு சிறு திறமையாளர்கள், மக்கள் எனப் பலரையும் நேரில் சந்தித்து பாராட்டினார். இதுவே, மக்கள் மனதில் ராகுல் பதிய முக்கியக் காரணமாக இருந்தது.
வயநாட்டில், ராகுல் காந்தி 7,06,367 வாக்குகள் பெற்றுள்ளார். சி.பி.ஐ வேட்பாளர் சுனீர் 2,74,597 வாக்குகள் பெற்றார். இதே தொகுதியில் ராகுல் காந்தி என்ற பெயரிலேயே மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பெயரை வைத்து ராகுலின் வாக்குகளை இவர்கள் பிரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகுல் பெருவாரியான வாக்குகளைப் பெற்று முதல் முறையாகத் தென் இந்திய தொகுதியில் இருந்து மக்களவைக்குச் செல்கிறார்.
இது மட்டுமில்லாது, கடந்த வருடத்தில் சபரி மலை தீர்ப்பு வெளியான பிறகு அங்கு பெரும் கலவரங்கள் வெடித்தன. இதனால், அந்தத் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், அவை அனைத்தையும் உடைத்து காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். கேரளாவில், காங்கிரஸ் அழுத்தமாகக் கால் பதித்ததற்கு ராகுலின் பிரவேசமே காரணம் என கட்சி தரப்பிலிருந்து கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: