ஞாயிறு, 19 மே, 2019

தங்கநகை மோகம்.. . இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் .. திருடர்களுக்கு வேட்டை ..

LR Jagadheesan : இங்கே லண்டனில் பெரும்பாலும்
ஆசியர்கள் தான் அதிகமான தங்கநகை அணிவார்கள். அதுவும் 22 காரெட் தங்கம். இந்தியா, இலங்கை,
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு நாட்டுக்காரர்களின் தங்கநகை மோகம் சொல்லி மாளாது. ஈழத்தமிழர்களின் தாலிச்சரடே பத்து பவுன் என்பது ஏறக்குறைய இங்கே பொது விதி.
அடுத்து கருப்பினத்தவர்களும் மத்திய கிழக்கு நாட்டுக்காரர்களும் தங்க நகை காதலர்கள் தான். எனவே தெற்காசிய வீடுகளில் நடக்கும் திருட்டுகள் எல்லாமே 99% நகைதிருட்டுகள் தான். வேறு பொருட்களை பெரும்பாலும் தொடக்கூட மாட்டார்கள்.
இதில் ஈடுபடுபவர்கள் அதில் கைதேர்ந்தவர்கள். இந்த தெற்காசிய சமூகத்தவர் எங்கெல்லாம் நகைகளை ஒளித்துவைப்பார்கள் என்கிற பட்டியலோடு தான் வருவார்கள். லண்டன் காவல்துறையும் தெற்காசிய சமூகங்கள் அதிகம் வாழும் இடங்களில் இதுகுறித்த விழிப்புணர்வெல்லாம் செய்வார்கள். ஆனாலும் ஆசியர்களின் தங்க மோகமும் குறையவில்லை. அவர்கள் வீடுகளை குறிவைக்கும் நகைத்திருட்டும் குறையவில்லை.

இந்தியாவில் இருப்பதைப்போல இங்குள்ள வங்கிகள் பெரும்பாலும் லாக்கர்  வசதி தருவதில்லை.  இந்த வெற்றிடத்தை குறிவைக்கும் லாக்கர் வசதிகள் தனி வர்த்தகமாக விரிவடைந்து வருகின்றன. அதில் ஒரு விளம்பரம் தொடர்ந்து Facebook இல் வந்தபடி இருக்கிறது. இது ஆசியர்களை குறிவைத்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.
அதுவும் அட்சயதிருதியைக்குப்பின் இது வருவது தான் சுவாரஸ்யமானது. அட்சய திருதியயைக்கு முன் தங்கம் வாங்கச்சொல்லும் நகைக்கடை விளம்பரங்கள். அவை முடிந்ததும் வாங்கிய நகைகளை பத்திரமாக பாதுகாக்க எங்களிடம் வாருங்கள் என்று சொல்லும் இந்த பாதுகாப்பு பெட்டக விளம்பரங்கள்.
அட்சயதிருதியைக்கு நகை வாங்காத ஆளுகளுக்கும் Facebook ஏன் இந்த விளம்பரத்தை போட்டு கொல்லுதுங்கறது தான் கேள்வியே.
வெள்ளைக்காரன் எப்ப பாரு முத்தம் குடுத்துகிட்டே இருப்பான்னு இந்தியர்கள் நம்புறா மாதிரி ஆசிய வீடுகள்ள தோலா தோலாவா தங்கம் கொட்டிக்கிடக்கும்னு வெள்ளக்காரன் நினைக்கிறான் போல. எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.

கருத்துகள் இல்லை: