வியாழன், 23 மே, 2019

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் 17 வது முதல்வராகப் பதவியேற்கிறார்! .. சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய 7 விஷயங்கள்

vikatan.com - சத்யா கோபாலன் : ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. பத்தாண்டுகளுக்குப் பிறகு இழந்த செல்வாக்கை அவர் மீட்டிருப்பதாகவும் ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன. இப்படியொரு வெற்றிக்காக ஜெகன் கொடுத்த விலையும் சாதாரணப்பட்டதல்ல....
1. ஆந்திர மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர ரெட்டி. நான்கு முறை எம்.பி, 4 எம்.எல்.ஏ எனத் தொடர் வெற்றிகளைக் குவித்தவர். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நல்லமலா காட்டுப் பகுதி வழியாக ஹெலிகாப்டரில் பயணித்தார். அந்த வாகனம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு ருத்திரகொண்டா மலை உச்சியில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திடீர் மரணத்தை ஆந்திர மக்கள் எதிர்பார்க்கவில்லை. 
2. ராஜ சேகரரெட்டி மரணத்துக்குப் பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜெகன்மோகன் ரெட்டி 2010-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். ஒய்.எஸ்.ஆர் பெயரில் கட்சி தொடங்கினாலும் மக்களின் செல்வாக்கைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. இருப்பினும், 2011-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ், தெலுங்கு தேச வேட்பாளரைத் தோற்கடித்தார் ஜெகன்.

3. எம்.பியாக வெற்றி பெற்ற பிறகு அடுத்தடுத்த வழக்குகளில் சிக்கினார். ஊழல் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்தார். இதனால் இவருக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 2013-ம் ஆண்டு ஜெகன் மீதான வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் வேலைகளைத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி 66 இடங்களைக் கைப்பற்றியது. அதேநேரம், நடிகர் பவன் கல்யாண் `ஜன சேனா’ என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். அதிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
4. 2017-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு எதிராக `ப்ரஜா சங்கல்ப யாத்ரா’ என்ற பெயரில் 13 மாதங்கள் 3,000 கி.மீ வரை நடைபயணம் மேற்கொண்டார். அதுதான் ஆந்திராவில் ஜெகனின் காலடி சற்று அழுத்தமாகப் பதியத் தொடங்கிய தருணம். அதேநேரத்தில் பா.ஜ.கவுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான கூட்டணி முறிந்தது ஜெகனுக்குச் சாதகமாக அமைந்தது. இதையடுத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. இவை அனைத்தும் ஒரு வருடத்துக்குள் நடந்ததால் சந்திரபாபு நாயுடுவின் கோட்டையில் விரிசல் விழத் தொடங்கியது.
5. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சிதான் காரணம் எனப் பேச்சுகள் கிளம்பியதால், ஜெகன் மோகன் ரெட்டி பக்கம் சாயத் தொடங்கினர் ஆந்திர மக்கள். தன் பக்கம் வந்த மக்களை இழுத்துப் பிடிக்கும் வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார் ஜெகன். ஆந்திர அரசுக்கு எதிராக  `உங்களை நம்ப மாட்டோம்’ என்ற முழக்கத்துடன் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை ஒரு வருடத்துக்கு முன்னதாகவே தொடங்கினார்.
6. ஆந்திராவின் பட்டிதொட்டி வரை நேரில் சென்று தன் கட்சிக்காகத் தீவிரப் பிரசாரம் செய்தார். ஒரு வருடமாக நடத்திய போராட்டங்கள், பிரசாரங்கள் ஆகியவை ஜெகன்மோகன் ரெட்டியின் மதிப்பைக் கூட்டின. அதற்கு ஏற்றாற்போல் சந்திரபாபு நாயுடுவுக்கும் மக்கள் மத்தியில் பெயர் கெடும் வகையில் சில பிரச்னைகளும் அரங்கேறின. இவை அனைத்தையும் பயன்படுத்தி சரியாகக் காய் நகர்த்தி தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. சென்ற தேர்தலில் 103 இடங்களில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி இந்த முறை வெறும் 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
7. தந்தை இறந்த பிறகு தான் இழந்த செல்வாக்கை சரியாக பத்து வருடங்களுக்குப் பிறகு பிரமாண்டமாக மீட்டெடுத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இன்று மாலை சந்திரபாபு நாயுடு தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், வரும் 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் 17 வது முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை: