சனி, 20 ஏப்ரல், 2019

பணம் இல்லைன்னா எதுக்குய்யா சீட் கேட்கணும்?’ – அறிவாலயத்தில் கொட்டி தீர்த்த ஸ்டாலின்

ஸ்டாலின்விகடன் : “அவர் என்ன இல்லாதப்பட்டவரா… டீ சாப்பிடக்கூட காசு தர மாட்டேன்னா எதுக்கு வந்து போட்டியிடணும். பேசாமல் ராஜ்யசபா சீட் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…” என அறிவாலயப் பொறுப்பாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர் நிர்வாகிகள்.
தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. கோடை வெயிலின் தாக்கத்தால் முகமெல்லாம் கறுத்துப்போய் பல வேட்பாளர்களின் அடையாளமே மாறிப்போய்விட்டது. அதேநேரம், உட்கட்சி மோதல் பஞ்சாயத்துகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதில், அறிவாலயத்தில் நடந்த மோதல்தான் ஹாட் டாபிக்.

தமிழகம் முழுவதும் நேற்று 71 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில், “நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 79.75 சதவிகித வாக்குகளும் குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 57.43 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருக்கிறது” எனப் பேட்டி அளித்திருக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு அதிக வாய்ப்பு என்பதற்கான விடையை அறிந்துகொள்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தைவிடவும் உட்கட்சி மோதல்களைச் சமாளிப்பதிலேயே சில கட்சிகளுக்கு நேரம் கடந்துவிட்டது. அப்படியும், தமிழகம் முழுவதும் அதிக உற்சாகத்தோடு வலம் வந்தனர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்தில் அனல் பரப்பினர். இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால், கட்சிப் பஞ்சாயத்துகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். கடந்த சில நாள்களாக அவரைக் கோபம் கொள்ள வைத்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தனர் தி.மு.க நிர்வாகிகள் சிலர்.


“அ.தி.மு.க தரப்பில் வாக்குக்கு 300 ரூபாயைச் செலவு செய்துள்ளனர். அ.ம.மு.க தரப்பிலும் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு தி.மு.க பணம் கொடுக்கவில்லை. சில தொகுதிகளில் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு காரணமாகப் பணம் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சித் தலைமை 5 கோடி ரூபாய் வரையில் கொடுத்திருந்தது. இந்தப் பணத்தின் பெரும்பகுதியை பகுதிக் கழக நிர்வாகிகளும் மாவட்டப் பொறுப்பாளர்களும் பங்கு போட்டுக்கொண்டதால் அடிமட்ட நிர்வாகிகளுக்கு எந்தவிதப் பணமும் சென்று சேரவில்லை. திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதியின் நிர்வாகி ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை அவர் வெளியில் காட்டவே இல்லை. இதைப் பற்றி மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகனின் கவனத்துக்கு நிர்வாகிகள் கொண்டு சென்றபோது, `அதைப் பற்றியெல்லாம் நான் கேள்வி கேட்க மாட்டேன். நீ சொல்லும் புகாரின்பேரில் நான் நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டார். இப்படியொரு பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை.

கடந்தமுறை ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 40,000 ரூபாயைக் கொடுத்தார்கள். இதில், சாப்பாடு உட்பட இதர செலவுகளுக்கு மட்டும் 15,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த முறை ஒவ்வொரு பூத்துக்கும் வெறும் 15,000 ரூபாயை மட்டுமே கொடுத்தார்கள். சாப்பாடு, டீ செலவுக்கெல்லாம் கொடுக்க முடியாது என வேட்பாளர் தரப்பிலிருந்து கூறிவிட்டார்கள். மாவட்டச் செயலாளர் சேகர்பாபுவின் தன்னிச்சையான செயல்பாடுகளும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தென்சென்னை தொகுதியில் வேட்பாளர் தரப்பிலிருந்தும் தாராளமாகச் செலவு செய்தனர். சில தொகுதிகளில் தங்கள் கைக்காசைக்கூட வேட்பாளர்கள் எடுக்கவில்லை. ஆற்காடு வீராசாமி தரப்பிலிருந்து பெரும் தொகையைக் களமிறக்க நினைத்தனர். `வேலூரைப் போல இங்கும் தேர்தல் ரத்தாகிவிடக் கூடாது’ என்ற பயத்தில் பணத்தை வெளியில் எடுக்க மறுத்துவிட்டனர். ஆனாலும், கீழ்மட்ட நிர்வாகிகள் யாரும் முகம் கோணாதபடி பார்த்துக் கொண்டனர்.


ஆனால், ஒரு சில தொகுதிகளில் பூத் கமிட்டிக்குக்கூட வேட்பாளர்கள் பணம் தராமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், `அவர் என்ன இல்லாதப்பட்டவரா… டீ சாப்பிடக்கூட காசு தர மாட்டேன்னா எதுக்கு வந்து போட்டியிடணும். பேசாமல் ராஜ்யசபா சீட் வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே…’ என அறிவாலய பொறுப்பாளர்களிடம் ஆதங்கப்பட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட வேட்பாளர் தரப்பு, `தேர்தல் செலவுக்குப் பணம் கேட்கிறார்கள். ஸ்டாலின் எப்போது பணம் கொடுப்பார்?’ எனக் கேட்டுள்ளனர்.
இந்தத் தகவல் ஸ்டாலின் கவனத்துக்கு நேரிடையாகச் செல்ல கொந்தளித்துத் தீர்த்துவிட்டார். ‘அவர் எதுக்குய்யா சீட் கேட்டாரு. பணம் செலவழிக்க முடியலைன்னா சீட் வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே…’ எனக் கோபத்தை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். பணம் செலவு செய்யாமல் இருந்ததற்கு முக்கியக் காரணம், தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அதிகமாக இருப்பதால் உறுதியாக வென்றுவிடுவோம். எதற்குச் செலவு செய்ய வேண்டும் என்ற மனநிலையில் வேட்பாளர் இருந்ததுதான். ஆனால், இதேநிலை அடுத்த தேர்தலிலும் தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் யாரும் தேர்தல் வேலை செய்யவே வர மாட்டார்கள். எந்தெந்தத் தொகுதிகளில் என்னென்ன மாதிரியான உள்ளடி வேலைகள் நடந்தன என்பது குறித்த விசாரணையும் விரைவில் தொடங்கும்” என்கின்றனர் உறுதியாக.
vikatan.com,

கருத்துகள் இல்லை: