வியாழன், 18 ஏப்ரல், 2019

ராகுல் காந்தியின் கேரளா மொழிபெயர்ப்பு .. கலக்கும் மலையாள பெண் . வீடியோ

vikatan.com - ;மலையரசு  ; ராகுல் காந்தி உரையை மொழிபெயர்த்த கேரளப் பெண் ஜோதி விஜயகுமார், கேரளாவில் வைரலாகிவருகிறார்.
ஜோதி விஜயகுமார், இந்தப் பெயர்தான் நேற்றில் இருந்து கேரளா முழுவதும் அதிகமாக உச்சரிக்கப்படும் பெயர். இந்த ஜோதி விஜயகுமார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் வைரலாகக் காரணம், அவரது மொழிபெயர்ப்புதான். பத்தனாபுரம் மற்றும் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்தார். இதனால் “யார் அந்த ப்ளூ சேலை பெண். நன்றாக பேசுகிறாரே” என்கிற ரீதியில் கேரள மக்கள் அவரை தேடினர். ஜோதி, பாரம்பர்ய காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். செங்காநல்லூரில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் என்பவரின் ஒரே மகள்தான் இந்த ஜோதி. கேரளாவில், சிவில் சர்வீஸ் அகாடமியில் சமூகவியல் துறையில் பணிபுரிந்துவருகிறார்.


ஜோதி, மொழிபெயர்ப்பு செய்வது இது புதிது ஒன்றும் கிடையாது. 2016-ம் ஆண்டு சோனியா காந்தி வந்தபோதுகூட அவருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார். அப்போது வைரலாகாதவர், இப்போது வைரலானதுக்குக் காரணம், சமீபகாலமாக ராகுல் காந்தி சந்தித்துவரும் மொழிபெயர்ப்புப் பிரச்னையைத் துளியும் இல்லாமல் பார்த்துக்கொண்டதுதான். மிகவும் நேர்த்தியாக, ராகுல் பேசி முடித்த அடுத்த நொடியே மொழிபெயர்த்துக் கலக்கினார் ஜோதி. அவரது பேசும் விதம், சைகைகள்  என்பதைத் தாண்டி, தேசியப் பிரச்னைகள், மாநிலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொண்டு, உடனுக்குடன் மொழிபெயர்த்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ராகுல் காந்தியை விட ஜோதி பேசும்போது தான் மக்கள் அதிகமாக கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதனால், நேற்றிலிருந்து அவர்தான் கேரளாவில் அதிகம் பேசப்படும் நபராக மாறியுள்ளார். ராகுல் பேசுவதை உடனுக்குடன் குறிப்பு எடுத்துக்கொண்டு அதனை சிரித்த முகத்துடன் பேசினார். இதனால் பத்தினாபுரத்தில் பேசிய அவரை திருவனந்தபுரம் பொதுக்கூட்டத்துக்கும் மொழிபெயர்க்க காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். கூட்டம் முடிந்த பின்பும் அவர் பேசியது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெகுவாக பாராட்டி வரவேற்பு கொடுத்தனர்.
ஜோதி
“ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்ததைப் பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். நான் நேற்று ராகுல்ஜி-யின் வார்த்தைகளை மொழிபெயர்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவில்லை. ராகுல் காந்தியின் உரையைச் சரியாக மொழிபெயர்த்தேனா என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால், இந்தியாவைக் குறித்து அவர் பேசிவரும் கருத்துகள் என் மனத்தின் ஆழத்தில் பதிந்திருந்தது. ராகுல் காந்தி எங்கு பேசினாலும் அதை நான் மிஸ் பண்ணியதில்லை. பலமுறை அவர் பேசியதை பேஸ்புக்கிலும், டிவியிலும் கண்டுள்ளேன். அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதில் பதிந்திருந்தது. அதைத்தான் மக்கள் மனத்தில் பதியவைத்தேன். முதலில் டென்ஷன் இருந்தது. ஆனால் பேசி முடித்தபின்பு மொத்தமாக அந்த டென்ஷன் போய்விட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்துள்ளேன். மக்களின் அன்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார் ஜோதி.

கருத்துகள் இல்லை: