திங்கள், 15 ஏப்ரல், 2019

தரக்குறைவான மேடைப் பேச்சு: திமுக பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்

tamil.thehindu.com : பிரதமர் மோடி, பிரேமலதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் குறித்த திமுக பேச்சாளரின்  தரக்குறைவான மேடைப் பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (ஏப்ரல் 15) முடிவடைகிறது. இதனால் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் பேச்சாளர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். சமீபத்தில் தென்சென்னையில் நடைபெற்ற திமுக சார்பான பொதுக்கூட்டம் ஒன்றில் பேச்சாளர் ஒருவர் பேசிய வீடியோ பதிவு பெரும் வைரலானது. அதில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேச்சாளர் ஒருவர் பேசினார். அவர் பேசிய வார்த்தைகள் மிகவும் கொச்சையாக இருந்தது.

பேச்சாளரின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, யூ டியூப் பக்கத்தில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார்கள். ஆனால், அந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் சிறுசிறு வீடியோக்களாக வெளியானது.
இவர் மீது என்ன நடவடிக்கை என்று திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைக் குறிப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இது பெரும் சர்ச்சையானது.
இந்தப் பேச்சு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மோசமான, ஏற்றுக்கொள்ள முடியாத, வெட்ககரமான பேச்சு. தான் சொல்வதை நிரூபிக்க ஏன் ஆண்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போக வேண்டும் என்று யோசிக்கிறேன். அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி இதே போன்ற வார்த்தைகளை அவர்கள் கண்டிப்பாக கேட்க விரும்ப மாட்டார்கள். திமுக உடனடியாக இதைப் பார்த்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
கேள்வி கேட்கும் பாஜக ஆதரவாளர்கள், தங்கள் கண்களையும், அறிவையும் திறந்து, இந்தப் பேச்சுக்கு எதிராக நான் அறிவாலயத்தையும் டேக் செய்து பதிவிட்டிருக்கும் ட்வீட்டைப் பார்க்க வேண்டும். உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம் சகோதரர்களே. நீங்கள் முட்டாள்கள் என எங்களுக்குத் தெரியும். அதை தயவுசெய்து நிரூபிக்காதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் ஒரே கூட்டணியில் இருந்தாலும், எதிர்க்கட்சியினர் குறித்த தரக்குறைவான பேச்சுக்கு குஷ்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: