புதன், 17 ஏப்ரல், 2019

வேலூர் தேர்தல் ரத்துக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

tamil.news18.com ;வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு முன்னதாகவே அனைத்து பணமும் கைபற்றப்பட்டு விட்டது. அதே போல வேலூர் தொகுதியில் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை. >வேலூர் தொகுதி தேர்தல் ரத்தை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்த அறிவிப்பாணையை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தேர்தல் அறிவித்தபின் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட குடியரசு தலைவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் படி, அதிகாரம் வழங்கப்படவில்லை. முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய மட்டுமே குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும், தேர்தலை நடத்தவும் கண்காணிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசன சட்டப்படி, தேர்தலை ரத்து செய்வதற்கு குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ தள்ளிவைக்கவோ முடியும். பண பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யலாம். தேர்தலையே ரத்து செய்ய முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிற வேட்பாளர்களின் கருத்துக்களை கேட்காமல் அவர்களையும் தண்டிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தேர்தலை நடத்த செய்யப்பட்ட செலவு வீணாகிவிட்டது.

தேர்தலை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும், அந்த அறிவிப்பாணையை ரத்து செய்து வேலூர் தொகுதிக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் சுகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் பேசுகையில், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் பணம் கைப்பற்றபட்டதானேலேயே தேர்தல் ரத்து செய்தது எந்த வகையில் நியாயம்?


அவர் வீட்டில் சோதனை நடந்த நாள் முதல் நேற்று மாலை வரை இடைப்பட்ட காலத்தில் நாங்கள் செய்த பிரச்சாரங்கள், உழைப்பு அனைத்தும் வீணானது’ என்று தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கு முன்னதாகவே அனைத்து பணமும் கைபற்றப்பட்டு விட்டது. அதே போல வேலூர் தொகுதியில் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு வேலை முறைகேடு நடைபெற்றிருந்தால், தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வழக்கு தொடரலாம், தேர்தலை ரத்து செய்ய கூடாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பணம் கைப்பற்றப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் இதே போல் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். வேலூர் தொகுதியில் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. எனவே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் பேசுகையில், தேர்தலை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு. குடியரசு தலைவரின் முடிவல்ல. அவர் ஒப்புதல் மட்டுமே வழங்கினார். வேலூரில் கதிர் ஆனந்த் வீட்டில் பணம் கைபற்றப்படுவதற்கு முன்னரே ஏராளமான வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், பலருக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ள வேட்பாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை தான் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலேயே வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

வார்டு வாரியாக வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இருந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என்றும் வழக்கறிஞர் நிரஞ்சன் கூறினார்.

இதனை தொடர்ந்து தீர்ப்பு மாலை 4:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலூர் தொகுதி தேர்தல் ரத்தை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை உயர் நீதிமன்றம் கூறவில்லை.

கருத்துகள் இல்லை: