செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தேனீயில் பன்னீர் கொடுக்கும் கூப்பன்! அதை பர்னிச்சர் கடையில் கொடுத்தால் திருமண சீர்வரிசை பொருட்கள் இலவசம் . .. விதவிதமான பட்டுவாடாக்கள் ...

டிஜிட்டல் திண்ணை- அதிமுக பணப்பட்டுவாடா நிலவரம் !மின்னம்பலம் : ”அதிமுக தரப்பிலும் ஓட்டுக்கு பல தொகுதிகளில் பணம் போய்க்கொண்டிருக்கிறது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ஒன்றிய செயலாளர்கள் வரை பணம் போய் சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒன்றிய செயலாளர்கள் தரப்பில் இருந்து சில தொகுதிகளில் இன்னும் கீழே உள்ள நிர்வாகிகளுக்கான பட்டுவாடா என்பது சரியாக செய்ய ஆரம்பிக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் இருந்தே சேலத்தில் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார்.
ஸ்டாலின் எப்படி திருவாரூரில் தொடங்கி திருவாரூரில் முடித்தாரோ அதே போல எடப்பாடியும் சேலத்தில் தொடங்கி சேலத்தில்தான் முடித்திருக்கிறார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் பலரும் இன்று, ‘ஓட்டுக்கு காசு கொடுத்தா கொடுங்க.. கொடுக்கலைன்னா போங்க. முதல்ல கூட்டத்துக்கு வந்ததுக்கு பெட்ரோல் போட காசு கொடுங்க...’ என்று கோபத்துடன் சண்டை போட்டிருக்கிறார்கள். முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதில்தான் இப்படியான பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தகவல்கள் வேட்பாளர் சரவணன் கவனத்துக்குப் போயிருக்கிறது. அவர் உடனடியாக இதை எடப்பாடியிடம் சொல்லிவிட்டாராம். ‘பிரச்சாரம் முடிச்சதும் பேசிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் பல வீடுகளுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கல்யாண வயதில் அந்த வீட்டில் பெண்கள் இருந்தால், அந்த கூப்பன் கொடுக்கப்படுகிறது. அந்தக் கூப்பனை அந்த ஊரில் உள்ள பர்னிச்சர் கடையில் கொடுத்தால், திருமணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வீட்டுக்கு டெலிவரி சார்ஜ் கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஸ்டீல் கட்டில், மெத்தை, ஸ்டீல் பீரோ, பாத்திரங்கள், பூஜை பொருட்கள் அடங்கிய செட் அது.
அந்த கூப்பனை நிர்வாகிகள் சரியாக கொடுக்காமல் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிட்டார்கள் என தொகுதிக்குள் சல சலப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஓ.பி.எஸ்ஸிடம் இந்த பஞ்சாயத்து வந்திருக்கிறது. அவர் கூப்பிட்டு விசாரித்தபோது, ‘தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமலா இருப்பான். விடுங்கண்ணே பார்த்துக்கலாம்..’ என அவருக்கே சமாதானம் சொல்லிட்டுப் போயிருக்கிறார்கள் நிர்வாகிகள்.
அதேபோல தேனி தொகுதியில் ஒரு வீட்டுக்கு 1000 ரூபாய் வீதம் நான்கு ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறது அதிமுக தரப்பு. அந்த வீட்டுக்காரரோ, ‘ஆண்டிப்பட்டி பக்கத்துலதான் அங்கே ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்து இருக்காங்க. எங்க மச்சான் வாங்கி இருக்காரு. நீங்க ஏமாத்திட்டு இருக்கீங்களா?’ என சண்டைக்குப் போய்விட்டாராம் . ‘அது இடைத் தேர்தல் நடக்குற தொகுதிங்க...’ என்று சொல்லி அதிமுக நிர்வாகிகள் புரிய வைப்பதற்குள் பெரும்பாடாக இருக்கிறதாம்.
இன்று இரவுக்குள் அத்தனை வாக்களர்களுக்கும் போய் சேர வேண்டியது சேர்ந்தாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது அதிமுக தரப்பு. அதே நேரத்தில் அதிமுக பணம் கொடுப்பதை பெரிதுபடுத்த வேண்டாம். பிறகு நாம் கொடுக்கும் போது அவங்க டார்ச்சர் பண்ணுவாங்க. அதை தடுத்தால் மக்களுக்கும் கோபம் வரும் என்று திமுக தலைமையில் இருந்து உத்தரவு போயிருப்பதால், திமுக ஆட்கள் அமைதி காக்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்

கருத்துகள் இல்லை: