திங்கள், 15 ஏப்ரல், 2019

கட்சிகள் பணத்தை வாரி இறைக்கின்றன ... புலம்பும் உ.பி.க்கள்!

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அனுப்பிய பணம்- புலம்பும் உ.பி.க்கள்!“மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் மார்ச் 11 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே துரைமுருகன் சில மாவட்டச் செயலாளர்களை தனித்தனியே கூப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு சில எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து தொகுதி எப்படி இருக்கு என கேட்டுக் கொண்டிருந்தார். ‘அண்ணே... போன சட்டமன்றத் தேர்தல்லயே நாம துட்டுக்கொடுத்திருந்தோம்னா இந்நேரம் ஆட்சியில இருந்திருக்கலாம்ணே.... துட்டு கொடுக்காமயே 90 தொகுதி ஜெயிச்சோம். அதனால இப்பவாச்சும் செலவு செய்யணும்னே’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் பேசி முடித்த பிறகு துரைமுருகன் பேசும்போது, ‘இந்த கட்சியில நாங்கள்லாம் ஒரு நாளைக்கு நாலு டீ குடிச்சுட்டு தேர்தல் வேலை பாத்திருக்கோம். உங்களை அப்படி பாக்க சொல்லலை. என்கிட்ட நீங்க வந்து சொன்ன சில முக்கியமான விஷயங்களை பொருளாளர்ங்குற முறையில தலைவர்கிட்ட சொல்லிட்டேன். .

கடைசியாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ’சிலர் என்னிடமும் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். நானும் உணர்ந்துள்ளேன். கடைசி நேரத்தில் எல்லா ஆயுதங்களும் பயன்படுத்தப்படும். இதுக்கு மேல வெளிப்படையா நானும் பேசமாட்டேன். நீங்களும் பேசாதீங்க’ என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின். கடைசி நேரத்தில் எல்லா ஆயுதங்களும் என்று ஸ்டாலின் சொன்னது பணத்தைத்தான் என்பதே மாவட்டச் செயலாளர்களின் கருத்து.
மார்ச் 11 ஆம் தேதி ஸ்டாலின் சொன்ன இந்த வார்த்தைகளை நம்பி ஏப்ரல் 11 ஆம்தேதி வரை திமுக வேட்பாளர்களும் மாவட்டச் செயலாளர்களும் காத்திருந்தனர். ஒருபக்கம் அதிமுக சட்டமன்ற இடைத் தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் பணத்தை இறைத்துக் கொண்டிருக்க, திமுக தரப்பில் இருந்தும் இப்போது பணம் வெளியே வர ஆரம்பித்திருக்கிறது. திமுக தலைமையில் இருந்து மூன்று நாட்கள் முன்புவரை எந்தத் தகவலும் இல்லாத நிலையில் வேட்பாளர்களே பார்த்து பணத்தை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென இப்போது ஒரு மக்களவைத் தொகுதிக்கு பத்து கோடி ரூபாய் என்று அனுப்பப்பட்டிருக்கிறது. கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் வருகிறது.
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் பார்த்திபன். அவர் சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தலைமை கொடுத்த தொகை போலவே தானும் சேர்த்து , ஒரு நபருக்கு 200 ரூபாய் வீதம் தயார் செய்து அந்த மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் கொடுத்திருக்கிறார். பார்த்திபனிடம் பணத்தை வாங்கிக் கொண்ட சிவலிங்கமோ, 200 ரூபாய் எதுக்கு? 100 போதும்’ என சொல்லி 100 ரூபாய் மட்டும் கொடுக்கச் சொல்லி பொறுப்பாளர்களிடம் கொடுத்திருக்கிறார். பொறுப்பாளர்களோ, ‘100 ரூபாயை கொண்டு போய் கொடுத்தால் மக்கள் காரி துப்புவாங்க...’ என்று சொல்லி இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லையாம்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதீஷ் தரப்பில் 400 ரூபாய் வரை ஒரு ஒட்டுக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தலைமை தரும்போது தரட்டும் என்று முடிவு செய்த பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி 300 ரூபாய் என கொடுக்க ஆரம்பித்தாராம். நேற்று (ஏப்ரல் 14) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஆரம்பித்து காலை வரையில் கள்ளக்குறிச்சி தொகுதியின் பல பகுதிகளுக்கும் திமுகவின் பண விநியோகம் ஆரம்பித்துவிட்டது. ஆனால் நேற்று சில பகுதிகளுக்கு விட்டுப் போய்விட்டது. இரண்டு கோடி ரூபாய் அளவு மட்டும் கொடுத்துவிட்டு, சில நிர்வாகிகளிடம் ‘நீங்க ஒரு 20 லட்சம் ரெடி பண்ணி கொடுங்க. வாங்கிக்கலாம்..’ என கேட்க ஆரம்பித்தாராம் கௌதம சிகாமாணி. நிர்வாகிகள் அதிர்ந்துவிட்ட நிலையில் எப்படியோ இரவோடு இரவாக போராடி பணத்தை ரெடிசெய்து இன்று அதிகாலை மீண்டும் விட்டுப் போன ஏரியாக்களுகெல்லாம் கொடுத்து முடித்திருக்கிறார்கள்.
கடலூர் திமுக வேட்பாளர் யாரையும் எதிர்பார்க்காமல் ஓட்டுக்கு 200 ரூபாய் என விநியோகத்தை தொடங்கிவிட்டாராம். ‘தலைமை என்ன சொல்லுதுன்னு அப்புறம் பார்த்துக்கலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் எதுக்கு வெய்ட் பண்ணணும். கொடுத்துடலாம்..’ என சொன்னதுடன் பணமும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
மக்களவைக்கு 10 கோடி என்றால் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் அதே அளவு 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது திமுக. இரண்டு லட்சம் பேருக்கு தலா 500 என்ற அளவுக்கு இடைத் தேர்தல் தொகுதிகளில் விநியோகிக்க திட்டமாம்.
இந்நிலையில் தலைமையைத் தொடர்புகொண்ட சில சீனியர் மாசெக்கள் ஒரு எம்.பி. தொகுதிக்கு பத்து கோடிங்குறது ரொம்பக் குறைவா இருக்கு என்று இழுக்க, ‘உங்களுக்காச்சும் 10 கொடுத்திருக்காங்க. தூத்துக்குடிக்கு 3தான் போயிருக்கு. அட போங்கப்பா..’ என்று அறிவாலய வட்டாரத்தில் இருந்து சொன்னார்களாம். கடைசி நேர ஆயுதம் பயன்படுத்தப்படும் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொன்னார், இப்படிப் பயன்-படுத்திவிட்டாரே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் திமுகவின் நிர்வாகிகள்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்

கருத்துகள் இல்லை: