செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா - கனிமொழி நேரில் ஆதரவு வீடியோ


மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தர்ணா - நேரில் சந்தித்து கனிமொழி ஆதரவு
தினத்தந்தி : :மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கொல்கத்தா, சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐஅதிகாரிகள் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது கமிஷனரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசார், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


இந்த நிலையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பெருமளவில் கூடியுள்ளனர்.

மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக திமுக எம்.பி கனிமொழி, "மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா பானர்ஜியின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை" என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: