Garga chatterji |
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜியுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து.
கே. தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
ப. மேற்கு வங்கத்தில் இப்போது நடப்பதை புரிந்துகொள்ள, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முகுல் ராய், போன வருடம் பா.ஜ.கவில் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முகுல் ராயும் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில், சில ஐ.பி.எஸ். அதிகாரிகளை சி.பி.ஐ மூலம் கண்காணிக்கும்படி முகுல் ராய் சொல்கிறார். இரண்டாவதாக, பிப்ரவரி மாத துவக்கத்தில் தாக்கூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ராஜீவ் குமாரை எதிரி என்பதைப்போல குறிப்பிடுகிறார். அடுத்த இரண்டு நாட்களில், அதுவும் ஞாயிற்றுக் கிழமையன்று ராஜீவ் குமாரை விசாரிக்க வருகிறது சி.பி.ஐ. 40 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு எவ்வித தேடுதல் ஆணையும் இன்றி வருகிறார்கள்.
இத்தனைக்கும் பிப்ரவரி 12ஆம் தேதிவரை, தன்னை விசாரிக்கக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து தடை ஆணையைப் பெற்றிருக்கிறார் ராஜீவ் குமார். படத்தின் காப்புரிமை Reuters ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்த சாரதா சிட் ஃபண்ட் வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐக்கு நீதிமன்றம் மாற்றியது. அப்போது மாநில காவல்துறை தன் வசமுள்ள ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். ஆனால், ஐந்தாண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும்போது மம்தா பானர்ஜியை குறிவைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
இந்த வழக்கு நிச்சயம் தேர்தலுக்கு முன்பாக முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்பாக சாரதா வழக்கில் பெரிய ஆட்களைக் கைதுசெய்திருக்கிறோம் என்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். நம் கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கப்படுவதை எதிர்க்கும் ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் இந்த யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஒரு குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஐந்தாண்டுகளாக திருணாமூல் தலைவர்களை, அக்கட்சியின் ராஜ்ய சபா தலைவர் உட்பட, அழைத்துச் செல்வது, விசாரிப்பது, துன்புறுத்துவது என்றே செயல்பட்டுவந்தார்கள். இந்த ஐந்து ஆண்டுகளாக திருணாமூலுக்கு எதிராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவர்கள் நோக்கமாக இருந்தது.
ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முகுல்ராய், பா.ஜ.கவில் சேர்ந்த பிறகு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆக, சி.பி.ஐ. முழுக்க முழுக்க ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி, ஒரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்போது, மாநில அரசின் மீது ஊழல் புகார் வந்தால் அதை சி.பி.ஐ. விசாரிக்காது. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் முதல்வரும் அவர் மனைவியும் வியாபம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எந்த விசாரணையும் நடக்கவில்லை.
சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லையென நான் சொல்லவில்லை. ஆனால், மத்திய அரசின் மீது ஊழல் புகார் வந்தால் எந்த அமைப்பிடம் செல்வது?
சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தவறு செய்தால் யார் கேட்பது? இதெல்லாம் அரசியல் சாஸன சிக்கல்கள். சி.பி.ஐ. போன்றவை ஒரு கட்சியின் ஆட்சியே நாடு முழுவதும் இருக்கும் என்ற காங்கிரஸ் காலத்து நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், மாநிலக் கட்சிகள் அதிகாரத்தையும் வலுவையும் பெற்றிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சூழலும் மாறியிருக்கிறது. ஆகவே சட்டம் - ஒழுங்கு, குற்றம் போன்றவற்றை புலனாய்வு செய்ய மத்திய அமைப்புகள் தேவையா என மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
மாநில அரசுகள், மாநில காவல்துறைகளை கைப்பாவையாக பயன்படுத்துமென்றால், மத்திய அமைப்புகளை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தாதா?
இப்போது நடப்பது என்னவென்றால், மேற்கு வங்கத்தில் ஆட்சியை கலைக்க ஒரு சாக்கைத் தேடுகிறது பா.ஜ.க. ஏனென்றால் அக்கட்சியால் ஜனநாயக ரீதியாக அங்கு ஒருபோதும் வெல்ல முடியாது.
கே. சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் கூடாது என்றால், பல மாநிலங்களை இணைத்துச் செயல்படும் குற்றங்களை எப்படி விசாரிப்பது?
ப. எந்த அமைப்பாக இருந்தாலும் அது அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் வரக்கூடாது. ஆனால், நம்மைப் போன்ற பரந்துபட்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட நாட்டில், எந்த அமைப்பாவது அரசியல் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க முடியுமா? யுபிஎஸ்சி, சி.பி.ஐ. போன்றவை விதிப்படி பார்த்தால் சுயாதீனத் தன்மை கொண்டவைதான். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? மத்திய அரசுக்கு கேள்வியே கேட்க முடியாத அதிகாரங்கள் இருக்கும்; ஆனால், மாநில அரசுக்கு அப்படி ஏதும் இருக்காது என்பது எப்படி சரியாக இருக்கும்? உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகளே பேசுகிறார்களே..
கே. தற்போதைய சூழலை மம்தா தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என்று சொல்லலாமா? மம்தா தேர்தலுக்காக சூழலை பயன்படுத்திக்கொள்கிறார்?
ப. ஒரு அரசியல் தலைவர் அப்படித்தான் செய்வார். இப்போது சி.பி.ஐ. அலுவலகங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சரியா? மாநிலத்தில் யாருக்காவது பாதுகாப்பு வேண்டுமென்றால் மாநில காவல்துறையைத்தானே அணுக வேண்டும்? மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி ஆதாரங்களை அழிக்கிறார் என மத்திய அரசு குற்றம்சாட்டினால், மாநிலத்தில் இருப்பவர்கள் அதை அரசியல் ரீதியாக பயன்படுத்தத்தான் பார்ப்பார்கள். ஆக, தீர்வு என்பது அரசியல் ரீதியான தீர்வாகத்தான் இருக்க முடியும்.
கே. மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒடுக்க தன் பதவியைப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் வரும்போது அவர்களது ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் தடுப்பது போன்றவை சரியா?
ப. இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிரசாரம். மற்றொன்று உண்மை. இந்த விவகாரத்தில், எதிர்கட்சியினரின் ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் செய்தார் என்பது பிரசாரம். இரண்டு பேரது ஹெலிகாப்டர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்பதுதான் பரவலாகப் பேசப்படுகிறது. முதலாவதாக அமித்ஷாவின் ஹெலிகாப்டர். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, பராமரிப்புப் பணி நடந்துவந்த ஏர் ஸ்ட்ரிப்பில் அவர் இறங்க விரும்பினார்.
மம்தா பானர்ஜிகூட அங்கே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் அருகில் உள்ள வேறொரு ஹெலிபேடில்தான் இறங்கினார். அதேபோல, அமித்ஷாவுக்கும் வேறொரு ஹெலிபேடில் இறங்கும்படி சொல்லப்பட்டது. பிறகு, அவர் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி, கூட்டத்தை நடத்திவிட்டுத்தானே சென்றார். அவர் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்று பிரசாரம் செய்த தில்லி ஊடகங்கள் அவர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதை சொல்லினவா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தில்லி ஊடகங்கள் இயங்கும் விதம் மிக ஆச்சரியகரமானது. அவர்கள் மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள். ஒரே செய்தியை மக்கள் பின்தொடர்ந்து கடைசிவரை செல்வதில்லை என்பதை மனதில்கொண்டு செயல்படுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளை வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அரக்கர்களை உருவாக்குகிறார்கள். யோகி ஆதித்யநாத் விவகாரத்திலும் இதேதான் சொல்லப்பட்டது. வேறொரு இடத்தில் இறங்கி காரில் வரும்படி கூறப்பட்டது. பிரதமரெல்லாம் வந்து செல்லவில்லையா? இவர்கள் ஏன் எப்போதும் ஹெலிகாப்டரில் வருகிறார்கள்? ஏன் சாதாரண விமானங்களைப் பயன்படுத்துவதில்லை? அதில் வந்து, காரில் ஒரு மணி நேரம் - இரண்டு மணி நேரம் பயணம் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே? தில்லியிலிருந்து வந்து, ஒரு இரண்டு மணி நேரம்கூட இங்கே செலவழிக்க முடியாது என்றால், வங்க மக்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?
பா.ஜ.க. ஆளும் அசாமில், 38 லட்சம் வங்காளிகள் - இவர்களில் 28 லட்சம் பேர் இந்து வங்காளிகள் - பெயர் இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடிமக்கள் இல்லையென ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் வங்காளிகளைக் குறிவைத்து இந்த வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. அங்கே வங்காளிகளுக்காக திருணமூல் காங்கிரஸ் கட்சி பணியாற்றிவருகிறது. ஆகவே தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களை, எம்எல்ஏ, அமைச்சர்களை அசாமின் சில்சோருக்கு அக்கட்சி அனுப்பியது. ஆனால், அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியில் வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இது தொடர்பாக தில்லி ஊடகங்கள் நாள் முழுவதும் எப்போதாவது செய்தி வெளியிட்டனவா?
அசாம் தனி நாடா என்று கேள்வியெழுப்பினவா? வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.
இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாஸன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.
கே. சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் தற்போதைய ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டால், அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டியதுதானே முறை? அதற்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை செய்ய வேண்டும்?
ப. அவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தால், நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்கலாமே, யார் தடுத்தது? இதற்கென குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. உலகில் எங்கெல்லாம் பாசிசம் ஆட்சிசெய்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊழல், உடனடி நீதி ஆகியவற்றை சொல்லித்தான் எல்லா அட்டகாசங்களையும் செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இதைத்தான் செய்கிறார்கள். குடியரசின் அர்த்தம் அதுவல்ல.
கே. ஆனால், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வரும்போது அவர்களை இவ்வாறு தடுப்பது சரியா?
ப. அவர்கள் மத்திய அரசின் காவலர்கள் அல்ல. தில்லி சிறப்பு காவல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறை, அவ்வளவுதான். மத்திய அரசிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் புனிதமானவர்களா, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனிதமற்றவர்களா? இந்தச் சிந்தனை எப்படி வருகிறது?
கே. ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் மம்தா சி.பி.ஐ. விசாரணையைக் கோருகிறார். பிறகு வேண்டாம் என்கிறார்...
ப. மம்தா பானர்ஜி எதிர்க் கட்சியாக இருக்கும்போது சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றார். அதைத் தன் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பினார். இப்போது பா.ஜ.கவும் அதையே செய்கிறது. யார் வேண்டுமானாலும் இப்படி அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்றால் எதற்காக அப்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்? அது ஒரு அரசியல் அமைப்பு. அந்த அமைப்பை மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு பயன்படுத்திவருகிறது. அதன் பற்களை உடைக்க வேண்டும். அவ்வளவுதான்.
கே. இந்தப் பிரச்சனைக்கு எப்படி முடிவு வருமென நினைக்கிறீர்கள்?
ப. இரண்டுவிதங்களில் இருக்கலாம். முதலாவதாக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி, ராஜீவ் குமாரை வாக்குமூலம் அளிக்க உத்தரவிடக் கோரியிருக்கவேண்டும். முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். ராஜீவ் குமார் சாட்சியங்களை அழித்திருந்தால் அது மிகப் பெரிய குற்றம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது அதைவிட மிகப் பெரிய குற்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக