வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

உதயநிதி ..அரசியலில் ஒரு அதிமுகவுக்கதான் இருக்க முடியும். இரண்டு அதிமுகக்கள் இருக்கவே முடியாது

உதயநிதியை தேவையில்லாமல் திணித்து திமுக மீதான நல்லெண்ணெத்தை சிதைக்கும் அண்ணியாரிடம் அதை செய்யவேண்டாம் என்று சின்னதாய் ஒரு கோரிக்கை வையுங்கள். உங்களால் முடிந்தால்.
LR Jagadheesan : “வாழ்வா சாவா தேர்தல் வாசலில் வந்து நிற்கும்போது
உதயநிதியை பத்தி பேசுவது தமிழகத்துக்கு துரோகம் செய்வதைப்போன்றது”
அண்ணியாருக்கு சொல்லவேண்டிய அறிவுரையை அரசியல் விமர்சகர்களுக்கு சொல்கிறார் உடன்பிறப்பு. புலிக்கு பயந்தவனெல்லாம் எம்மேல வந்து விழுங்கடான்னு சொல்றமாதிரியான வாதம் இது.திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தமிழ்நாடு முழுக்க அந்த கட்சிநடத்தும் ஊராட்சிமன்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்ளச்செய்தது யார்? அவருக்கு பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தது யார்? கட்சியின் சார்பில் மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கும் அதிகாரத்தை கொடுத்தது யார்? எந்த அடிப்படையில், எந்த நோக்கத்துக்காக உதயநிதிக்கு இவையெல்லாம் செய்யப்படுகிறது? யார் செய்கிறார்கள்? அண்ணியாரா? அரசியல் விமர்சகர்களா?
அரசியல் விமர்சகர்களுக்கு துரோக முத்திரை குத்துவதற்குமுன் அண்ணியாருக்கு அறிவுரை சொல்லலாமே? அறிவுரை கூட வேண்டாம். ஒரு கோரிக்கை மனுவாவது சமர்ப்பிக்கலாமே? எது தடுத்தது?

வரப்போகும் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் வாழ்வா சாவா தேர்தலல்ல. திமுகவின் முழுமையான தலைமை பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றிருக்கும் மு க ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கும் இது அக்கினிப்பரீட்சை தான். காரணம் கடந்தகாலங்களில் அவரது அரசியல் முடிவுகளாலும் திமுக தோற்றபோது அப்பாவின் மேல் பழியைப்போட்டு தப்பித்த மாதிரி இந்த தேர்தலில் இனி தப்பிக்க முடியாது. இந்த தேர்தல் முடிவுக்கு முழு பொறுப்பையும் அவர் ஏற்றே ஆக வேண்டும்.
அதுவும் 2004 நாடாளுமன்றத்தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக கூட்டணி தமிழ்நாடு/பாண்டியின் 40க்கு 40 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துக்காட்டியது. இத்தனைக்கும் அப்போது ஆனப்பெரிய “இரும்பு மனுஷி” ஜெயலலிதா கையில் ஆட்சி அதிகாரம் இருந்தது. அதையும் தாண்டி ஜெயித்துக்காட்டினார் கலைஞர்.
இப்போது “இரும்பு மனிஷி”யில்லை. ஆட்சியில் இருக்கும் எடப்பாடியை அவர் கட்சியே மதிப்பதில்லை. மத்திய மாநில ஆட்சி அலங்கோலங்களுக்கு எதிராக தமிழக மக்களின் பெரும்பகுதியினர் கோபத்தில் இருக்கும் சூழலில் 40க்கு 40 என்பது திமுகவுக்கு எளிதில் சாத்தியமாக வேண்டும். ஒன்று குறைந்தால் கூட அது ஸ்டாலினின் தலைமைக்கு சறுக்கல்தான்.
எனவே திமுகவின் 40/40 தேர்தல் வெற்றியை சாத்தியமாக்க உதயநிதியின் தேவையற்ற ஆணியான இந்த திணிக்கப்பட்ட ஊராட்சிமன்ற கூட்ட பங்கேற்பும் உளறல்களும் எந்த வகையில் பயன்படும்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இவரை இப்படி திணிக்கிறார்களே ஆட்சி கையில் கிடைத்தால் இவரை இன்னும் எப்படியெல்லாம் திணிப்பார்கள்? என்கிற அச்சத்தையும் தேவையற்ற அரசியல் திசை திருப்பல்களையும் தானே உருவாக்கும்? இந்த கேலிக்கூத்துக்கு மூல காரணம் யார்?
இதை சுட்டிக்காட்டினால் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதா? என்பீர்களா? அப்ப அண்ணியார் தான் தமிழ்நாட்டை காக்க அல்லும்பகலும் அவரும் உழைத்து அன்பு மகனையும் “போய்வா மகனே போர்க்களத்துக்கு” என்று அனுப்பி வைத்திருக்கிறாரா?
அரசியல் விமர்சகர்களுக்கு துரோக முத்திரை குத்துவதற்கு பதில் உதயநிதியை தேவையில்லாமல் திணித்து திமுக மீதான நல்லெண்ணெத்தை சிதைக்கும் அண்ணியாரிடம் அதை செய்யவேண்டாம் என்று சின்னதாய் ஒரு கோரிக்கை வையுங்கள். உங்களால் முடிந்தால்.
பிகு: அதிமுகவின் வாரிசு அரசியல் கூத்துக்களை காட்டி உதயநிதியை நியாயப்படுத்துவது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தலாம். கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் எளிது. அடிமைத்தனமும் மதவாதமும் ஜாதிச்சங்க அரசியலும் வேண்டும் என்கிற அதிமுக கும்பலுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் வாரிசு அரசியல் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் அடிமைத்தனமும் மதவாதமும் ஜாதிச்சங்க அரசியலும் வேண்டாம் என்கிற திமுக ஆதரவு வாக்காளர்களுக்கு அப்பட்டமாக திணிக்கப்படும் வாரிசு அரசியல் என்பது கண்டிப்பாக ஒரு பிரச்சனை தான். இந்தியோ, நீட்டோ அதிமுக மங்குனிகளுக்கு பிரச்சனையில்லை. இவையெல்லாம் திமுக வாக்காளர்களுக்கு கண்டிப்பாக முக்கியமான பிரச்சனைகள். அதைப்போன்றது தான் இதுவும். அத்தோடு அதிமுகவின் அட்டைக்காப்பியாக திமுக ஆக முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் ஒரு அதிமுகவுக்கு தான் இடமிருக்க முடியும். இரண்டு அதிமுகக்கள் இருக்கவே முடியாது. அதுவும் ஒரே சமயத்தில்.

கருத்துகள் இல்லை: