ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

தேமுதிக தொண்டர்கள் செய்தியாளர்களை தாக்கினர் .. பிரேமலதா தூண்டிவிட்டார் .. போலீசார் வழக்கு பதிவு

tamilthehindu :பிரேமலதா சுதீஷ், போலீஸாரிடம் புகார் அளிக்கும் தூத்துக்குடி செய்தியாளர்கள் பிரேமலதா சுதீஷ், போலீஸாரிடம் புகார் அளிக்கும் தூத்துக்குடி செய்தியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் களத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கட்சிக்காரர்களை தூண்டிவிடும் வகையில் பிரேமலதா பேசியதால் தேமுதிகவினர் செய்தியாளர்களைத் தாக்கினர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 56-வது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்க பிரேமலதா மற்றும் எல்.கே. சுதீஷ் இன்று போராட்டக் களத்திற்கு வந்தனர்.< களத்தில் மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய பிரேமலதா, ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களைப் பேசச் சொன்னார். பின்னர், பேசத் தொடங்கிய பிரேமலதா, தொடக்கம் முதலே மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட தேமுதிகவிற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

"உங்களது குறைகளை மத்திய மாநில அரசுகளிடம் விஜயகாந்த் கொண்டு செல்வார். திமுக, அதிமுக தவிர்த்து ஒருமுறை தேமுதிகவிற்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். விவசாயிகளின் நன்மைக்காக இதைச் செய்யுங்கள்" என்று பேசினார்.
"எந்த மீடியாவும் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை" எனக் கூட்டத்தில் ஒருவர் சொல்ல, அதற்கு பிரேமலதா, " இந்தப் போராட்டத்தை தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பி வருவது எங்களது எங்கள் டி.வி.மட்டுமே. " என 4 முறை திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். உள்ளூர் தனது டி.வி.செய்தியாளரையும் அழைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
முதல் 3 முறை வேறெந்த ஊடகங்களும் போராட்டத்தை ஒளிபரப்பவில்லை என்று சொன்னபோது, வழக்கமான அவதூறு என அமைதியாக இருந்த பத்திரிகையாளர்கள், 4வது முறை, "நான் இங்கு வந்ததால்தான் மீடியாக்கள் இங்கு வந்திருக்கிறார்கள்" என சொன்னபோது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தைப் புறக்கணித்து அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
அப்போது பத்திரிகையாளர்களைப் பார்த்து, பெண் நிர்வாகிகள் உட்பட தேமுதிகவினர் திட்டியுள்ளனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கும் தேமுதிகவினருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், தொலைக்காட்சி நிருபர்கள் 3 பேரை தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய புகாரின் பேரில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், ஆறுமுகநயினார், ஜெயராமன், மாவட்ட மகளிரணி பொருளாளர் அங்கயற்கண்ணி, ஜெயராமன் உள்ளிட்ட மேலும் பத்து பேர் மீது 147,148,294B, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.<

கருத்துகள் இல்லை: