திங்கள், 9 ஏப்ரல், 2018

ஸ்டாலின் : அண்ணா பல்கலை கழகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறது ... மாநில உரிமைகள் பறிமுதல் !

 M. K. Stalin : தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கல்வித்துறை (மனிதவள மேம்பாட்டுத்துறை) தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்போவதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில், பல்கலைக்கழகங்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மாநிலத்தில் உள்ள மத்திய பாஜகவின் பிரதிபலிப்பான அதிமுக அரசும், மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களை தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து செயல்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்து அவர்களுடைய சினத்தைக் கிளறியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றையும் சென்னை ராணி மேரிக்கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி போன்ற தமிழகக் கல்வி வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த உயர் தனிப்பெரும் நிறுவனங்களை, மத்திய அரசு சூழ்ச்சித் திறனுடனும், உள்நோக்கச் சதித்திட்டத்துடனும், தனது அதிகாரக் குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்தில் வெளி வரும் என்றும் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள தகவல், மாநில சுயாட்சி மீதும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் மீதும் நடத்தப்படும் அப்பட்டமான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, மத்தியில் உள்ள அதிகாரக் குவியலின் மீதேறி பா.ஜ.க. அரசு கோர தாண்டவம் ஆட குறிவைத்திருப்பதைப் போல் தெரிகிறது.

ஏற்கனவே, தமிழக அரசின் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவிலிருந்து துணை வேந்தர் நியமனம், கவின்கலைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவிலிருந்து துணைவேந்தர் நியமனம், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து துணைவேந்தர் நியமனம் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள், தனக்கு மாநில அமைச்சரவையின் ஆலோசனையே தேவையில்லை என்று தன்னிச்சையாக, ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பாக முடிவு எடுத்து அரசியல் சட்டத்தை மீறிச் செயல்பட்டு வருகிறார்.
பல்கலைக் கழகங்களுக்கு நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் மாநில அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரின் கைகளில் இருக்கும்போது, துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை கணக்கில் எடுத்துக் கொண்டு கலந்துகூட ஆலோசிக்காமல், துணை வேந்தர்களை நியமிப்பதை நிச்சயம் எவ்விதத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் தன் விருப்பப்படி செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரில் கொதிநீரை ஊற்றுவதற்குச் சமம்.
“துணை வேந்தர் நியமனத்தில் அரசை ஆளுநர் கலந்து ஆலோசிப்பதில்லை”, என்று அமைச்சர்கள் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்தபிறகும், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இதுபற்றி இதுவரை வாய் திறக்காமல் மவுனம் சாதித்துக்கொண்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசென்று, அனைத்தையும் காவிமயப் படுத்துவதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்ளவே இதுபோன்று தன்னிச்சையாக துணைவேந்தர்களை மாநில அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமலேயே நியமிக்க, மாநில ஆளுநர் அவர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசால் கண்ஜாடையால் சமிக்ஞை கொடுக்கப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகம் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் எழுந்துள்ளது.
“நேர்மையான, வெளிப்படையான தேர்வு” என்று கூறி பல்கலைக்கழகக் கல்வியை, வகுப்புவாத – ஒரேநாடு – ஒரேஇனம் - ஒரேமொழி எனப் பிற்போக்கு மயமாக்குவதற்கு, பிரச்சாரக் கருவியாக்கும் வாய்ப்பாக, மற்ற மாநிலங்களில் இருந்து துணைவேந்தர்களை இறக்குமதி செய்வதையும், தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் அனைவரும் திறமையற்றவர்கள் என்று ஒதுக்கி அவமதிப்பதையும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு, மாநில சுயாட்சிக்கு முதன்முதலில் குரல் கொடுத்த மாண்புக்குரிய மண். இங்குள்ள 13 பல்கலைக்கழகங்களும் மாநில சட்டங்களின்படி தமிழகத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள். மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த பல்கலைக் கழகங்களை “இறக்குமதி செய்யப்பட்ட” துணைவேந்தர்கள் மூலம் குறுக்கு வழியில் நிர்வகிக்கவோ, அதுவும் போதாது என்று நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அடிப்படைவாதத்தைத் திணிக்கவோ ஒத்திகை பார்க்கும் விபரீத விளையாட்டில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன். மத்திய பா.ஜ.க. அரசு அப்படியொரு அத்துமீறலில் ஈடுபடுமேயானால், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடுமையான போராட்டத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தூக்கிக்கொண்டு போக மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டால் அவற்றுக்கு அதிமுக அரசு எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கக்கூடாது என்றும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் யாரும் மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மீறி பா.ஜ.க.வின் காவிமயக் கொள்கைக்கு கைகொடுக்கக் கடுகளவும் செயல்படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். அப்படி மீறிச் செயல்படும் துணைவேந்தர்களை நேரடியாக டிஸ்மிஸ் செய்வதற்கு மாநில அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்றும், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனவிலும் நினைக்கக்கூடாது என்றும், எங்காவது ஒரு மூலையில் அது போன்ற கனவு இருந்தால் கூட அதை முளையிலேயே கிள்ளி தூரஎறிந்து விட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: